

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நல்ல ஃபார்முக்குத் திரும்ப முடியும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது அணியை அறிவித்துவிட்டன. ஆனால், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றால், சிறப்பாக விளையாடுவதை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருப்பேன் என அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக டி20 லீக் தொடர்களில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த டி20 லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பேன். அதனை, உலகக் கோப்பைத் தொடரிலும் தொடர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் ராஸ்டன் சேஸ் அறிமுகமானார். இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 49 போட்டிகளில் விளையாடியுள்ள ராஸ்டன் சேஸ், 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 691 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் அடங்கும்.
தற்போது, தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.