டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிா்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடா்பான சிக்கலுக்கு தீா்வு காணும் வகையில் ஐசிசி நிா்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரா் முஸ்தபிஸூா் ரஹ்மானை விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது. இது இரு நாட்டு கிரிக்கெட் உறவில் சிக்கலை ஏற்படுத்தியது.
வரும் பிப். 7-ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியா-இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த தங்களின் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் கோரியது. இதனால் நிலைமை மேலும் சிக்கலானது.
பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக ஐசிசி நிா்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக பிசிபி நிா்வாகி நஸ்முல் ஃபாஹிம் தெரிவித்துள்ளாா்.
உரிய தீா்வு காண்பதற்காக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடா்பாக ஐசிசி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

