

ICC T20 Worldcup: டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாமென வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அனைத்து அணிகளையும் அந்தெந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் பிசிசிஐ வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அந்த வழிகாட்டுதலின்படி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவதாக இருந்த வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக, ஐபிஎல் தொடர் வங்கதேசத்தில் ஒளிபரப்பப் படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிம் இக்பால் வலியுறுத்தல்
வங்கதேச மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை புறக்கணிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா - வங்கதேசம் இடையிலான விவகாரம் மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. தற்போதுள்ள சூழலில் உடனடியாக முடிவுகளை மேற்கொள்வது மிகவும் கடினம். ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தியே பல சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை ஒருவர் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உலக கிரிக்கெட் விவகாரங்களில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலை என்ன என்பதையும், வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்களில் அரசு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால், கிரிக்கெட் சார்ந்த முடிவுகளை வங்கதேச கிரிக்கெட் வாரியமே தன்னிச்சையாக எடுக்க வேண்டும். சில முடிவுகள் சரி என கிரிக்கெட் வாரியம் நினைக்கும் பட்சத்தில், அந்த முடிவுகளை தயங்காமல் எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் கருத்துகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். நாங்கள் விளையாடும்போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிறைய விஷயங்களைக் கூறிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுத்தால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் போன்ற மிகப் பெரிய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க முடியாது. இன்று எடுக்கும் முடிவுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கும், கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தும் எந்த முடிவு சிறந்ததாக இருக்குமோ அந்த முடிவையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.
வங்கதேச அணிக்காக தமிம் இக்பால் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.