

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தொடர்வதையே விரும்புவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும், கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை ஆரம்பக் கட்டத்தில் மிகவும் சிறப்பாக வழிநடத்தினர். இவர்கள் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கடைபிடித்தது.
இருப்பினும், நாளடைவில் மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்விகளை சந்திக்கத் தொடங்கியது. முன்னாள் வீரர்கள் பலரும் இங்கிலாந்து அணியை விமர்சிக்கத் தொடங்கினர். தற்போது, ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி 1-4 என தொடரை இழந்துள்ளது இங்கிலாந்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்தபோதிலும், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமே தொடர வேண்டும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமே தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், அந்த முடிவு என்னுடைய கைகளில் இல்லை. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர வேண்டுமா என என்னிடம் கேட்டால், என்னுடைய முழு ஆதரவையும் அவருக்கு அளிப்பேன். அவருடன் இணைந்து இங்கிலாந்து அணியை வழிநடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மிகவும் சிறந்த மனிதர். மிக மிக நல்ல பயிற்சியாளர் என்றார்.
ஆஷஸ் தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி அடுத்து அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் மாதத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.