

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி கண்டிப்பாக விளையாடுவார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி விளையாடப் போகிறார் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். மேலும் ஒரு உலகக் கோப்பையில் அவர் விளையாட விரும்புகிறாரா என்பதே தெரிய வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் விளையாட அவர் தயாராகி வருகிறார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் என நினைக்கிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாதபோது இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்ததை பார்த்தோம். அவர்கள் இல்லாமல் அணியில் வெற்றிடம் உருவாகியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இருந்து இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றால், அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும். அதனால், விராட் கோலி கண்டிப்பாக ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார் என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.