

இந்திய அணி வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து மிகவும் சீக்கிரமாக ஓய்வு பெற்றுவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மிகவும் சீக்கிரமாக ஓய்வு பெற்றுவிட்டதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்ற வேட்கை விராட் கோலியிடம் இருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி போன்று கிரிக்கெட்டின் மீது தீராத வேட்கை கொண்டுள்ள வீரர் ஒருவரை இதற்கு முன்பாக நான் பார்த்திருப்பதாக நினைக்கவில்லை. அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. அவரைப் போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ள வேறு யாராலும் முடியாது. அவர் ஒரு இயந்திரம் போன்றவர்.
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் ஆட்டத்தை நான் மிஸ் செய்கிறேன். அவர் மிகவும் சீக்கிரமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், அவரை நாம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கண்டிப்பாக பார்க்கலாம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றார்.
கடந்த 2014-15 ஆம் ஆண்டு இடைவெளியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆலன் டொனால்டு செயல்பட்டபோது, விராட் கோலியுடன் இணைந்து அவர் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.