

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம் :
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர் தமது காதலியுடன் 2-வது திருமணம் செய்ய உள்ளார்.
முன்னதாக, தமது முதல் மனைவி ஆயிஷா முகர்ஜியுடனான ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் விவாகரத்து பெற்றனர். முன்னதாக, தவானை மணமுடிக்கும் முன்பே, முதல் திருமணம் செய்து கொண்டிருந்த ஆயிஷாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2011-இல் தவானை மணமுடித்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. விவாகரத்துக்குப்பின், அவர்களுடைய ஒரே மகன் ஸோராவர் ஆயிஷாவுடனே வாழ்வதால் தவான் மகனைப் பிரிந்து வாடுவதை தாங்க முடியாமல், தான் விவாகரத்துக்குப்பின் அடைந்த மன வேதனையை கடந்தாண்டு பிப்ரவரியில் பொதுவெளியில் வெளிப்படுத்தி ஆதங்கத்தைக் கொட்டினார்.
இந்த நிலையில், துபையில் கடந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது தமது தோழி சோபி ஷைனுடன் ஷிகர் தவான் வலம் வந்ததைக் காண முடிந்தது. அப்போதிருந்தே இருவருக்குமான உறவு குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமொன்றின் துணைத் தலைவராக இருக்கும் சோபி ஷைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர். இந்த நிலையில், அவருக்கும் தவானுக்கும் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மலர்ந்தது இந்த உறவு.
கடந்த காலங்களில் ஐபிஎல் தொடர்களில் ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்ந்து விளையாடியபோது சோபி பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவித்து ஷிகர் மீதான அன்பை வெளிப்படுத்த தவறவில்லை. இருவரும் வரும் பிப்ரவரியில் திருமணம் செய்யப்போவதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.