

பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்க வீரர்களுக்கு இந்தியாவில் விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க அணியில் விளையாடும் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் 4 பேருக்கு இந்தியாவில் விசா மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வீரர் அலி கான் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டதன் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஸ்டோரியில் “இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளது; ஆனால், கேஎஃப்சி வெற்றி பெற்றது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களான அலி கான், ஷயான் ஜஹாங்கிர் , முகமது மொஹ்சின் மற்றும் எசான் அடில் ஆகியோருக்கான விசா அனுமதி செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய உயர்திகாரிகள் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மூவரும் பாகிஸ்தானில் பிறந்ததால் விசா மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், நேபாளம், கனடா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளிலும் பாகிஸ்தானில் பிறந்த வீரர்கள் விளையாடுகின்றனர். இதனால், அவர்களும் இந்த போன்று பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாகிஸ்தானின் ஷெய்க்கபுராவில் பிறந்த எசான் அடில் 2013 முதல் 2015 வரை பாகிஸ்தானுக்காக மூன்று டெஸ்ட் மற்றும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது இதுவே முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களான சிக்கந்தர் ஜூல்பிகர், சஹிப் ஜூல்பிகர், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது ஷிராஸ் அகமது, 2024-ல் இங்கிலாந்தின் ரெஹான் அகமது, ஷோயிப் பஷீர் உள்ளிட்டோரின் விசாக்கள் மறுக்கப்பட்டிருந்தது.
இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுவும் புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கான போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றக்கோரி வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.