

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் மாயாஜாலம் செய்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரைப் பாராட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (ஜனவரி 21) தொடங்கியது. நாக்பூரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் டிம் ராபின்சன் மற்றும் மார்க் சாப்மேனின் விக்கெட்டினை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றினார். ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் வீழ்த்தப்பட்ட இந்த இரண்டு விக்கெட்டுகளும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தன.
பந்துவீச்சில் மாயாஜாலம்
நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இரண்டு முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் மாயாஜாலம் செய்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பேட்டர்கள் அதிரடியாக விளையாடியபோதிலும், அவர் நல்ல எகானமி ரேட்டில் பந்துவீசினார். வருண் சக்கரவர்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் பந்துவீசியது அவரது உடல் மொழியிலிருந்தே தெரிந்தது.
வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் மாயாஜாலம் செய்பவர். அவர் பந்துவீச்சில் தவறுகள் செய்வதில்லை. அவர் மிகவும் புத்திசாலித்தனமாக பந்துவீசுகிறார். டி20 வடிவிலான போட்டிகளில் மட்டுமின்றி, ஒருநாள் வடிவிலான போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தி அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 23) ராய்பூரில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.