திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

தன்னம்பிக்கையை இழக்காமலிருந்தது எப்படி? மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

கடினமான சூழலில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தது எப்படி என இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

News image

இந்திய வீரர் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ

Updated On :2 மார்ச் 2026, 12:25 pm

கடினமான சூழலில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தது எப்படி என இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா ஆட்டத்தில் நேற்று (மார்ச் 1) இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த நிலையில், கடினமான சூழலில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தது குறித்து சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்தேன். என்னுடைய ஆட்டத்தில் நிறைய விஷயங்களை நான் மாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்பாக நன்றாக விளையாடியபோது, என்ன செய்தேனோ அதையே தொடர விரும்பினேன். என்மீது நம்பிக்கை வைத்தேன். என்னுடைய தொலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன், சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். என்னுடைய மனது என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே கேட்டேன்.

இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இலக்கை துரத்திப் பிடிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. அணியில் பேட்டர்கள் நிறைய பேர் இருப்பதாலும், பனிப்பொழிவு இருக்கும் என்பதாலும் எளிதாக சேஸ் செய்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். அதனால், போட்டி சவால் நிறைந்ததாக மாறியது.

நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், போட்டி சவாலானதாக மாறிய இடத்தில் என்னுடைய அனுபவம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது. எனக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று முடித்துக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால், எல்லா முறையும் அப்படி அமைவதில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானப் போட்டியில் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட நினைத்தேன். ஆனால், அந்த தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. அதன் பின், எனக்கு 10 நாள்கள் இடைவெளி கிடைத்தது. அந்த இடைவெளியில் நான் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. எனக்குள் நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். நன்றாக விளையாட முடியாததற்கு என்ன காரணம்? ஏன் சரியாக விளையாட முடியவில்லை? நன்றாக விளையாடுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சிந்தித்தேன். நிறைய பேரிடமிருந்து ஆலோசனைகள் வந்தன. அதில் நிறைய மதிப்புமிக்க ஆலோசனைகளை கவனிக்க முடிந்தது. ஆனால், சஞ்சு உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீ மூன்று சதங்கள் விளாசியுள்ளாய் என எனக்கு நானேக் கூறிக் கொண்டேன். என்மீது நம்பிக்கை வைத்தேன்.

இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட கிரிக்கெட் வீரர்கள் இந்த மாதிரியான நாளுக்காக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயல்பட வேண்டும் என தைரியத்துடன் நானும் கனவு கண்டேன். இளம் வீரராக கேரளத்தின் திருவனந்தபுரத்திலிருந்து வந்த ஒரு கிரிக்கெட் வீரரின் கனவு நனவாகியுள்ளது என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் சேஸிங்கின்போது, இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Summary

Indian team player Sanju Samson has opened up about how he remained so confident in difficult circumstances.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.