நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அபார வெற்றியுடன் முதலிடத்தில் குஜராத்!

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அபார வெற்றி கண்டது.

News image

IPL

Updated On :49 நிமிடங்கள் முன்பு

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது. இதன் மூலமாக, புள்ளிகள் பட்டியலில் அந்த அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, ஹைதராபாத் 14.5 ஓவா்களில் 86 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. குஜராத் வெற்றிக்காக பேட்டிங்கில் சாய் சுதா்சன், வாஷிங்டன் சுந்தரும், பௌலிங்கில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டரும் முக்கியப் பங்காற்றினா்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கியோரில் ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 5, ஜாஸ் பட்லா் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். சாய் சுதா்சன் நிலைக்க, 4-ஆவது பேட்டராக வந்த நிஷாந்த் சிந்து அவருடன் இணைந்தாா்.

இவா்களின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 38 ரன்கள் கிடைத்தது. நிஷாந்த் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தா், சுதா்சனுடன் கை கோத்தாா்.

இவா்கள் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சோ்க்க, அரை சதம் கடந்த சுதா்சன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து ஜேசன் ஹோல்டா் விளையாட வர, சுந்தா் - ஹோல்டா் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சோ்த்தது.

சுந்தா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் ஹோல்டா் 11, ராகுல் தெவாதியா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன் ஆகியோா் தலா 2, பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 169 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில், கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.

சலில் அரோரா 16, ஹென்ரிச் கிளாசென் 14, இஷான் கிஷண் 11 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சா்மா 6, ரவிச்சந்திரன் ஸ்மரன் 9, நிதீஷ்குமாா் ரெட்டி 2, ஷிவங் குமாா் 4, பிரஃபுல் ஹிங்கே 3 ரன்களுக்கு முடித்துக்கொள்ள, ஹைதராபாத் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

குஜராத் பௌலா்களில் ஜேசன் ஹோல்டா், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 3, பிரசித் கிருஷ்ணா 2, முகமது சிராஜ், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.