விராட் கோலியின் கனவை மூன்று பந்துகளில் சிதறடித்த நரைன்

இந்த வருடம் ஆர்சிபிக்கு மிகச்சிறந்த வீரர்கள் அமைந்துள்ளார்கள் எனப் பெருமையாகப் பேசினார் விராட் கோலி.
விராட் கோலியின் கனவை மூன்று பந்துகளில் சிதறடித்த நரைன்

11.2 ஓவர்களில் கொல்கத்தா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. 52 பந்துகளில் 59 ரன்கள் தேவை. 

ஆட்டம் சமநிலையில் இருந்தது. ஒரு நல்ல ஓவர் எந்த அணிக்குக் கிடைக்கிறதோ அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிற நிலை.

வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கினார் சுநீல் நரைன். 12-வது ஓவரை டேனியல் கிறிஸ்டியன் வீசினார். அந்த ஓவரில், இந்த ஆட்டத்தில் தான் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடித்தார் நரைன். கதை முடிந்தது.

அந்த ஓவரின் முடிவில் 48 பந்துகளில் 38 ரன்கள் தேவை என நிலைமை மாறியது. ஆட்டம் கடைசி ஓவரில் தீர்மானிக்கப்பட்டாலும் அந்த மூன்று சிக்ஸர்களுக்குப் பிறகு ஆர்சிபியால் ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பந்துவீசும்போது 4 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை 138/7 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய நரைன், பேட்டிங்கிலும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தார்.

வேறு எந்த வருடத்தை விடவும் இந்த வருடம் ஆர்சிபிக்கு மிகச்சிறந்த வீரர்கள் அமைந்துள்ளார்கள் எனப் பெருமையாகப் பேசினார் விராட் கோலி. ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2013-ம் ஆண்டில் அந்த அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் கோலி. எனினும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இதனால் இந்த வருடம் கேப்டன் பதவியை விட்டு விலகும் முன்பு, எப்படியாவது ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணிக்குப் பெற்றுத் தந்துவிட வேண்டும் எனக் கனவு கொண்டிருந்தார் விராட் கோலி. அதற்கான முயற்சிகளையும் எடுத்து லீக் சுற்றில் பல வெற்றிகளைப் பெற்றார். மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், சஹால், பரத் என ஆர்சிபி வீரர்களும் பல ஆட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்த வருடம் ஆர்சிபி அணி எப்படியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையைக் கைப்பற்றி விடும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மூன்றே பந்துகளில் ஆட்டத்தை முடித்து விராட் கோலியின் கனவைச் சிதறடித்துவிட்டார் நரைன். 

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாகப் பெயர் பெற்ற விராட் கோலி, ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்லாத குறையுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இந்த மனக்குறைக்கு நரைனும் ஒரு காரணமாகிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com