என்னுடைய டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை: மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

அஸ்வினை அணியில் தக்கவைத்துக்கொள்வார்கள் என நான் எண்ணவில்லை என்றார்.  
என்னுடைய டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை: மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

ஐபிஎல் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார். 

இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய அஸ்வின், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 7.16. சில ஆட்டங்களில் மூன்று ஓவர்களை மட்டுமே வீசினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் 5 ஆட்டங்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். எகானமி - 7.73. எனினும் டி20 உலகக் கோப்பை அணிக்குத் தேர்வானார். கடந்த வருடம் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றபோது 15 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 7.66. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. நேற்று, தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை நன்கு வீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அவரால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.

இந்நிலையில் அஸ்வினை விமர்சனம் செய்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் கூறியதாவது: 

அஸ்வின் எந்த அணியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அஸ்வினிடம் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. கடந்த ஐந்து, ஏழு வருடங்களாகவே அவர் இப்படித்தான் பந்துவீசி வருகிறார். அஸ்வின் டெஸ்ட் ஆட்டங்களில் அற்புதமாக விளையாடுகிறார். இங்கிலாந்தில் அவர் ஒரு டெஸ்டும் விளையாடாதது வேதனையானது. கடந்த ஐந்து வருடங்களாக அவர் ஒரே மாதிரி பந்துவீசி வருகிறார். என்னுடைய அணியில் அஸ்வினைச் சேர்க்க மாட்டேன். சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் வருண் சக்ரவர்த்தி, நரைன், சஹால் போன்ற வீரர்களையே தேர்வு செய்வேன். அவர்கள் விக்கெட்டுகள் எடுத்து நன்றாகப் பந்துவீசுகிறார்கள். நீண்டநாளாகவே டி20 கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளராக அஸ்வின் இல்லை. ரன்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவரை அணியில் தக்கவைத்துக்கொள்வார்கள் என நான் எண்ணவில்லை என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com