முதல்முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள்: பேட்டிங்கில் தடுமாறும் தோனி!

இந்த வருடம் இன்னும் மோசம். இதுவரை மொத்தமாக 114 ரன்கள் தான் எடுத்துள்ளார் தோனி.
முதல்முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள்: பேட்டிங்கில் தடுமாறும் தோனி!

ஐபிஎல் போட்டிகளில் வழக்கமான நன்றாக விளையாடி நிறைய ரன்கள் எடுக்கும் தோனி, கடந்த இரு வருடங்களாக குறைவாக ரன்கள் எடுத்து வருகிறார். சிக்ஸர்கள் அடிப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது.  

கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

கீழ்நடுவரிசை வீரராகக் களமிறங்கும் தோனி மற்ற வீரர்களைப் போல ஒரு பருவத்தில் 500, 600 ரன்கள் எடுக்காவிட்டாலும் தேவையான நேரத்தில் ரன்களைக் குவித்து சென்னை வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பார். அதுவும் கடைசி ஓவர்களில் பெரும்பாலும் தோனியை நம்பி இருக்கவேண்டிய நிலைமை இருக்கும்.

தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி விளையாடிய முதல் இரண்டு வருடங்களில் (2018, 2019) 455, 416 ரன்கள் எடுத்தார் தோனி. 2018-ல் சிஎஸ்கே கோப்பையை வென்றது. 2019-ல் 2-ம் இடம் பெற்றது. ஆனால் கடந்த வருடம் மொத்தமாக 200 ரன்கள் தான் எடுத்தார் தோனி. அதுவரை ஐபிஎல் போட்டியில் ஒரு பருவத்தில் தோனி எடுத்த குறைந்தபட்ச ரன்கள் இதுதான். சிஎஸ்கேவும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை. 

ஐபிஎல் போட்டியில் தோனி எடுத்த ரன்கள்

414 - 2008
332 - 2009
287 - 2010
392 - 2011
358 - 2012
461 - 2013
371 - 2014
372 - 2015
284 - 2016
290 - 2017
455 - 2018
416 - 2019
200 - 2020
114* - 2021

இந்த வருடம் இன்னும் மோசம். இதுவரை மொத்தமாக 114 ரன்கள் தான் எடுத்துள்ளார் தோனி. வேறு எந்த ஐபிஎல் போட்டியிலும் அவர் இவ்வளவு குறைவாக ரன்கள் எடுத்ததில்லை. பிளேஆஃப்பில் தில்லிக்கு எதிராகக் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக விளையாடி வெற்றியை அளித்தாலும் இந்த வருடம் தோனியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை என்பதே உண்மை. சிக்ஸர்களுக்குப் பெயர் போன தோனி, கடந்த வருடம் மிகக்குறைவாக 7 சிக்ஸர்கள் தான் அடித்திருந்தார். இந்தமுறை 3 சிக்ஸர்கள் மட்டும்தான்! 

இறுதிச்சுற்றில் நிலைமை மாறுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com