தில்லி அணியில் மற்றொரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா: பிடிஐ தகவல்

தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா....
தில்லி அணி (கோப்புப் படம்)
தில்லி அணி (கோப்புப் படம்)

தில்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் டிம் சைஃபர்ட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதன்பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. தில்லி அணியில் பேட்ரிக் ஃபர்ஹர்ட், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உள்பட ஐந்து பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். செவ்வாய் அன்று நடைபெற்ற கரோனா பரிசோதனையில் ஐவரைத் தவிர தில்லி அணியைச் சேர்ந்த மற்றவர்களுக்கு கரோனா இல்லை என்று தெரியவந்தது. 

இதையடுத்து புணே நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தில்லி அணியைச் சேர்ந்த ஐந்து பேரும் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரு பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு அவர்களால் அணியினருடன் இணைந்துகொள்ள முடியும். 

கடந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2-ம் பகுதி ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் தில்லி அணியைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு வீரரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று காலை தில்லி அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான டிம் சைஃபர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி அணியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com