பராக் மட்டும் மிரட்டல் அதிரடி: பெங்களூருவுக்கு 145 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
ஹசரங்கா பந்தில் போல்டான சாம்சன்
ஹசரங்கா பந்தில் போல்டான சாம்சன்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ஜாஸ் பட்லர் மற்றும் தேவ்தவ் படிக்கல் களமிறங்கினர். முகமது சிராஜ் வீசிய 2-வது ஓவரில் சிறப்பான சிக்ஸரை அடித்த படிக்கல் அதே ஓவரில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3-வது வரிசை வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். அவர் வந்த வேகத்தில் 4 பவுண்டரிகள் அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே பட்லரும் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவதற்குள் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, கேப்டன் சஞ்சு சாம்சன் சிக்ஸர்களாக பறக்கவிட்டு அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனால், அவரை 27 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் வனிந்து ஹசரங்கா. டேரில் மிட்செல் (16), ஷிம்ரோன் ஹெத்மயர் (3) சோபிக்கத் தவற ராஜஸ்தான் அணி கடுமையான நெருக்கடியில் இருந்தது.

ஆனால், இந்த ஆட்டத்தில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ரியான் பராக் களமிறங்கியதிலிருந்தே அதிரடியில் மிரட்டத் தொடங்கினார். இதனால், ஸ்கோர் சற்று உயர்ந்தது.

குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் பராக் தனது பினிஷிங் பொறுப்பை கச்சிதமாக செய்து முடித்தார். ஹேசில்வுட் வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரியும் 4-வது பந்தில் சிக்ஸரும் பறக்கவிட்ட அவர் 29-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

5-வது பந்தில் ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் அதை மறுத்த பராக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தானுக்கு சிறப்பான முடிவைத் தந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பராக் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com