சிஎஸ்கே தோல்விக்குக் காரணம் இதுதான்: அடித்துச் சொல்லும் பிளெமிங்

முடிவு மைதானத்தில் எடுக்கப்பட்டது. டுபேவின் பந்துவீச்சை அவர்கள் நன்குக் கையாண்டார்கள்.
சிஎஸ்கே தோல்விக்குக் காரணம் இதுதான்: அடித்துச் சொல்லும் பிளெமிங்

லக்னெள அணிக்கு எதிராகத் தோற்றதற்குப் பனிப்பொழிவு தான் காரணம் என சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னெள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னெள, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50, ஷிவம் டுபே 49 ரன்கள் எடுத்தார்கள். அவேஷ் கான், பிஸ்னோய், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடினமான இலக்கை நன்கு விரட்டிய லக்னெள அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் 40, குயிண்டன் டி காக் 61, எவின் லூயிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களை ஷிவம் டுபேவும் முகேஷ் செளத்ரியும் வீசியது லக்னெள அணிக்கு வசதியாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய டுபே, 25 ரன்களைக் கொடுத்தார். இதனால் சென்னையின் அணியின் முடிவுகளைப் பலரும் விமர்சித்துள்ளார்கள். 

லக்னெளவுடன் தோல்வியடைந்தது பற்றி சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது:

சூழல் காரணமாகச் சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்த முடியவில்லை. பனிப்பொழிவு காரணமாக அவர்கள் நன்கு விளையாடினார்கள். பந்தைப் பிடித்து சுழற்பந்துவீச்சை மேற்கொள்வது சிரமமாக இருந்தது. நன்கு அழுத்தம் கொடுத்துக் கடைசியில் அதிக ரன்கள் தேவைப்படும்படியான சூழலை உருவாக்க நினைத்தோம். கடைசியில் வேகப்பந்து வீச்சாளரோ சுழற்பந்து வீச்சாளரோ யாரைப் பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவு மைதானத்தில் எடுக்கப்பட்டது. டுபேவின் பந்துவீச்சை அவர்கள் நன்குக் கையாண்டார்கள். ஒரு ஓவர் முக்கியமாக அமையும் என நினைத்தோம். 2-வதாகப் பந்துவீசுவது கடினமாக உள்ளது. துல்லியமாகப் பந்துவீச வேண்டும் என நினைத்தோம். ஆட்டத்தில் ஒருபோதும் செளகரியமாக நாங்கள் உணரவில்லை. அது எங்கள் ஃபீல்டிங்கிலும் எதிரொலித்தது. சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்த முடியாது என்று தெரிந்தபோது திட்டத்தில் பள்ளம் இருப்பதை உணர்ந்துகொண்டோம். முடிந்தவரை போராடினோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com