அடுத்த தோனியா பதோனி?

உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேள்விப்படாத ஒரு பேட்டர், ஐபிஎல் போட்டியில் அசத்திக்கொண்டிருப்பது எப்படி?
அடுத்த தோனியா பதோனி?


ஐபிஎல் 2022 போட்டியின் புதிய நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார் ஆயுஷ் பதோனி.

லக்னெள அணி புள்ளிகள் பட்டியலில் 3 வெற்றிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள கேகேஆர் அணியும் 6 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. நெட் ரன்ரேட் மட்டும்தான் வித்தியாசம்.  

ராகுல் தலைமையில் விளையாடும் லக்னெள அணியின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக பதோனி இருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று. உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேள்விப்படாத ஒரு பேட்டர், ஐபிஎல் போட்டியில் அசத்திக்கொண்டிருப்பது எப்படி?

தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் லக்னெள வெற்றி பெற 5 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. ஷர்துல் தாக்குர் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து லக்னெள அணிக்கு வெற்றியை அளித்தார் 22 வயது பதோனி. இந்த இளம் வயதில் மிகுந்த பக்குவத்துடன் விளையாடி வெற்றிக்கோட்டைத் தொடுவதை வழக்கமாகவே கொண்டு வருகிறார். 

54(41), 19*(9), 19(12), 10*(3) என இந்த ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து லக்னெள அணியின் பெரிய பலமாக உள்ளார் பதோனி. 

லக்னெளவின் 3 வெற்றிகளில் இரு வெற்றிகள் இலக்கை விரட்டும்போது கிடைத்தன. இரண்டிலும் முக்கியப் பங்கு வகித்தார் பதோனி. சிஎஸ்கேவுக்கு எதிராக 19*(9), நேற்று தில்லிக்கு எதிராக 10*(3) என ரன்கள் எடுத்து தோனியை ஞாபகமூட்டும் விதத்தில் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு பதோனி தேர்வு செய்யப்பட வேண்டும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிச்சயம் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று இப்போதே பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

2018-ல் இந்திய யு-19 அணியில் இடம்பெற்று ஆசியக் கோப்பையில் விளையாடினார் பதோனி. இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்று கோப்பையை வென்றது. அந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பதோனி. அந்தப் போட்டியில் இரு அரை சதங்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்டில் இந்திய அணியில் விளையாடி 185 ரன்கள் எடுத்தார். ஆனாலும் தில்லி அணியில் இவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் பதோனியைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று அப்போது யு-19 அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு அறிவுரை வழங்கியும் பெரிய பலனில்லாமல் போனது. 

கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தில்லி அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடியும் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்து அதில் 8 ரன்கள் மட்டும் எடுத்தார் பதோனி. 

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னெள அணி 5-வது ஓவரில் 29/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது அருமையாக விளையாடி 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து தனது அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார் பதோனி. 38 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆட்டத்துக்குப் பிறகு ஹர்ஷா போக்ளே பதோனியிடம் கேட்ட கேள்வி இதுதான் - இத்தனை நாளாக எங்கு ஒளிந்திருந்தீர்கள்?

இன்று பேரும் புகழும் வாய்ப்புகளும் பதோனியைத் தேடி வந்தாலும் கடந்த மூன்று வருடங்களாகப் பெரிய போராட்ட வாழ்க்கை தான். தில்லி அணியிலும் பதோனியைத் தேர்வு செய்யவில்லை. ஒரு பருவத்தில் ஓர் ஆட்டத்தில் தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. லக்னெள அணியின் பயிற்சி ஆட்டங்களில் இரு அரை சதங்கள் எடுத்தார். கெளதம் கம்பீருக்கும் இதர பயிற்சியாளர்களுக்கும் அது பிடித்துப்போக, முதலில் இருந்தே வாய்ப்பு அளித்தார்கள். தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி செலுத்து விதமாக லக்னெள அணிக்கு வெற்றிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். 

பதோனி பேட்டிங் பற்றி லக்னெள அணி கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது: பதோனியின் பேட்டிங் காணொளிகள் சிலவற்றைப் பார்த்துள்ளேன். அதில் நல்ல ஷாட்களை அவர் ஆடுவதைத்தான் பார்க்க முடியும். ஆனால் ஐபிஎல் ஆட்டங்களில் அவர் ஆடியவிதம் அற்புதம். 360 டிகிரி வீரர் அவர். ஐபிஎல் போட்டியால் கண்டுபிடிக்கப்பட்ட திறமை. இந்தியாவுக்கு இது நல்லது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய பலமாக இருப்பார் என்றார். 

தன்னை ஒதுக்கி வைத்த தில்லி கிரிக்கெட் சங்கத்துக்குப் பதிலடி தரும் விதமாக தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார் பதோனி. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பதோனி இருப்பாரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அடுத்த தோனியாக பதோனி மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறார் என்பது மட்டும் நிஜம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com