திருமணம்: தென்னாப்பிரிக்காவுக்குப் பறந்தார் சிஎஸ்கே வீரர் கான்வே

30 வயது கான்வே இதுவரை ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார்.
திருமணம்: தென்னாப்பிரிக்காவுக்குப் பறந்தார் சிஎஸ்கே வீரர் கான்வே

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேவைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 30 வயது கான்வே இதுவரை ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். ஐபிஎல் 2022 தொடக்க ஆட்டத்தில் பங்கேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் கான்வேவுக்கு தென்னாப்பிரிக்காவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சிஎஸ்கேவின் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறி கிம் வாட்சனைத் திருமணம் செய்ய தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளார் கான்வே. இதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு அவரால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது. சிஎஸ்கேவின் அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று சிஎஸ்கே அணியினருடன் மீண்டும் இணைந்து கொள்வார். மும்பைக்கு வந்த பிறகு மூன்று நாள்களுக்கு அவர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று மும்பையை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணி, ஏப்ரல் 25 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மோதுகிறது. ஆறு நாள் ஓய்வுக்குப் பிறகு மே 1 அன்று சன்ரைசர்ஸுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்க கான்வே தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன்பு சிஎஸ்கே வீரர்களுக்கு பார்ட்டி அளித்தார் கான்வே. இந்தக் கொண்டாட்டத்தில் தோனி, பிராவோ உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பங்கேற்றார்கள். மேலும் அனைத்து சிஎஸ்கே வீரர்களும் வேட்டி உடையணிந்து விழாவை மேலும் சிறப்பித்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com