ஐபிஎல்: நோ பால் சர்ச்சையை 3-வது நடுவரிடம் கொண்டு செல்லாதது ஏன்?

இவ்வளவு பிரச்னைகளும் கள நடுவர்களின் பிடிவாதத்தால் தான் வந்தது. அவர்கள் 3-வது நடுவரிடம் முறையிட்டிருந்தால்...
ஐபிஎல்: நோ பால் சர்ச்சையை 3-வது நடுவரிடம் கொண்டு செல்லாதது ஏன்?

ஐபிஎல் 2022 போட்டியின் 34-வது ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

ராஜஸ்தான் - தில்லி அணிகள் மோதிய ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. பட்லர் 65 பந்துகளில் 9 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் அடித்த 3-வது சதம் இது. மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் சதமடித்துள்ளார். இதன்பிறகு பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. ரிஷப் பந்த் 44 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஒபட் மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார் ரோவ்மன் பவல். 3-வது பந்து பேட்டரின் இடுப்புக்குச் சற்று மேலே வீசப்பட்டதால் தில்லி அணி நடுவர்களிடம் நோ பால் கேட்டது. ஆனால் நடுவர்கள் நோ பால் வழங்க மறுத்துவிட்டார்கள். 3-வது நடுவரிடம் இதுகுறித்து விசாரிக்கவும் இல்லை. இதனால் கடுப்பான ரிஷப் பந்த், களத்தில் இருந்த பவல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். பிறகு உதவிப் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை மைதானத்துக்கு உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த பட்லர் இதுபற்றி ரிஷப் பந்திடம் காரசாரமாக விவாதம் செய்தார். இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ஆம்ரே திரும்பியவுடன் ஆட்டம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது. கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்துக் கடைசிப் பந்தில் 36 ரன்களுடன் ஆட்டமிழந்தார் பவல். 

ஆட்டம் முடிந்தபிறகு சமூகவலைத்தளங்களில் இச்சம்பவம் பற்றி பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னைகளும் கள நடுவர்களின் பிடிவாதத்தால் தான் வந்தது. அவர்கள் 3-வது நடுவரிடம் முறையிட்டிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் போட்டி விதிமுறைகளின்படி ஃபுல்டாஸ் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே கள நடுவர்களால் 3-வது நடுவரிடம் அது நோ பாலா எனக் கேட்க முடியும். இந்தச் சம்பவத்தில் பவல் ஆட்டமிழக்கமில்லை, பதிலாக சிக்ஸர் அடித்துள்ளார். இதனால் விதிமுறைகளின்படி கள நடுவர்களால் 3-வது நடுவர்களிடம் இதுகுறித்து சந்தேகம் கேட்க முடியாது. அது நோ பால் இல்லை என ஏற்கெனவே முடிவு செய்ததால் அந்த முடிவில் இறுதி வரை உறுதியாக இருந்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com