ஆயுஷ் பதோனி: இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் யாரும் என்னைத் தேர்வு செய்யவில்லை.
ஆயுஷ் பதோனி: இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

ஆயுஷ் பதோனி. 

இந்தப் பெயரை இதற்கு முன்பு எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள்? 

ஆனால் ஒரே ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரிடமும் அறிமுகமாகி விட்டார் 22 வயது பதோனி. நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு ஹர்ஷா போக்ளே பதோனியிடம் கேட்ட கேள்வி இதுதான் - இத்தனை நாளாக எங்கு ஒளிந்திருந்தீர்கள்? இதற்கு பதோனியின் பதில் - இதற்கு நான் என்ன பதில் சொல்வது?

2018-ல் இந்திய யு-19 அணியில் இடம்பெற்று ஆசியக் கோப்பையில் விளையாடினார் பதோனி. இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்று கோப்பையை வென்றது. அந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பதோனி. அந்தப் போட்டியில் இரு அரை சதங்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்டில் இந்திய அணியில் விளையாடி 185 ரன்கள் எடுத்தார். ஆனாலும் தில்லி அணியில் இவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 

கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தில்லி அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடியும் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்து அதில் 8 ரன்கள் மட்டும் எடுத்தார். 

நேற்றைய ஆட்டத்தில் லக்னெள அணி 5-வது ஓவரில் 29/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது அருமையாக விளையாடி 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து தனது அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார் பதோனி. 38 பந்துகளில் அரை சதமெடுத்தார். அவ்வளவுதான். பதோனி ஒரே அரை சதத்தில் கவனம் ஈர்த்துவிட்டார். தன்னுடைய பேட்டிங் பற்றி ஆயுஷ் பதோனி கூறியதாவது:

அரை சதம் எடுக்கும்போது சிக்ஸர் அடிக்கவேண்டும் என நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தியதால் அரை சதமெடுப்பதைப் பற்றி நினைக்கவில்லை. ஆட்டத்தில் விளையாடுவதற்கு முந்தைய இரவு நான் தூங்கவில்லை. முதல் பவுண்டரி அடித்த பிறகு நான் இங்கு விளையாடுவதற்குத் தகுதியான நபர் என உணர்ந்தேன். அதன்பிறகு நினைத்தபடி விளையாடினேன். அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். ஆட்டத்தின் சூழலை எண்ணி விளையாட வேண்டாம். அதற்கு மூத்த வீரர்கள் உள்ளார்கள். நீ நினைத்தபடி விளையாடு என்றார். 

கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் யாரும் என்னைத் தேர்வு செய்யவில்லை. சில அணிகள் என்னைக் கூப்பிட்டு என் பேட்டிங்கைக் கவனித்தார்கள். ஆனால் ஏலத்தில் யாரும் என்னைத் தேர்வு செய்யவில்லை. லக்னெள அணி தான் என்னை இம்முறை தேர்வு செய்தது. கடந்த மூன்று வருடங்களாகப் போராட்டம் தான். தில்லி அணியிலும் என்னைத் தேர்வு செய்யவில்லை. ஒரு பருவத்தில் ஓர் ஆட்டத்தில் தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. லக்னெள அணியின் பயிற்சி ஆட்டங்களில் இரு அரை சதங்கள் எடுத்தேன். கெளதம் கம்பீருக்கும் இதர பயிற்சியாளர்களுக்கும் அது பிடித்துப்போனது. இதனால்தான் கிருனால் பாண்டியாவுக்கு முன்னால் சென்று என்னை விளையாட வைத்தார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com