தொடரும் ஏமாற்றம்: சாய் கிஷோருக்கு குஜராத் அணி வாய்ப்பளிக்குமா?

அணி மாறினாலும் நிலைமை மாறாமல் இருப்பதை என்னவென்று சொல்ல? 
சாய் கிஷோர்
சாய் கிஷோர்

2020 ஐபிஎல் ஏலத்தில் தமிழக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அந்த வருடம் சிஎஸ்கே மோசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடம் பிடித்தும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

அடுத்த இரு வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் இன்னும் அதிகமாகத் திறமையை நிரூபித்தார் சாய் கிஷோர். இதனால் இந்திய அணிக்கும் தேர்வானார். அங்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

25 வயது சாய் கிஷோர், 2020 சையத் முஷ்டாக் அலி போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள். 2021 சையத் முஷ்டாக் அலி போட்டியில் 8 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை எடுத்து தமிழக அணி சாம்பியன் ஆக உதவினார். எகானமி - 6.06. இதுவரை விளையாடிய 38 டி20 ஆட்டங்களில் இவருடைய பந்துவீச்சு எகானமி - 5.46. 43 விக்கெட்டுகள். 

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. அந்த அணியில் ரஷித் கான் உள்ளதால் அவருக்குச் சரியான இணையாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால் குஜராத் அணியில் உள்ள ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவால் மீண்டும் பெஞ்சில் அமரவேண்டிய நிலைமை சாய் கிஷோருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று, லக்னெள அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடியது குஜராத். அதில் சாய் கிஷோர் இடம்பெறவில்லை. விஜய் சங்கர், ராகுல் தெவாதியா போன்ற ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் சாய் கிஷோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் நேற்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர், தெவாதியா ஆகிய இருவருமே பந்துவீசவில்லை. அதனால் அவர்கள் பேட்டர்களாக மட்டுமே தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். விஜய் சங்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தெவாதியா 24 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதனால் இனிவரும் குஜராத் ஆட்டங்களில் தெவாதியா கட்டாயம் இடம்பெறுவார். 

ரஷித் கான், தெவாதியா என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில் சாய் கிஷோருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. குஜராத் அணியில் பந்துவீச்சாளர்களுக்குக் குறையில்லை. அவர்களுக்குத் தேவை நல்ல பேட்டர்கள், பேட்டர் ஆல்ரவுண்டர்கள். சாய் கிஷோர் பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்துபவர் தான் என்றாலும் குஜராத் அணிக்கு சாய் கிஷோரின் பேட்டிங்கில் நம்பிக்கை வருமா எனத் தெரியவில்லை. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் கிஷோர், தற்போது அணி மாறினாலும் நிலைமை மாறாமல் இருப்பதை என்னவென்று சொல்ல? 

உள்ளூர் போட்டிகளில் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ள சாய் கிஷோருக்கு ஐபிஎல் போட்டியில் மட்டும் இடம் கிடைப்பதில் சிக்கலாக உள்ளது. குஜராத் அணி, சாய் கிஷோரின் திறமையை வீணடிக்கக் கூடாது. ஏதாவதொரு வழியை ஏற்படுத்தி அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும். சமீபத்தில் திருமணமான சாய் கிஷோர், ஐபிஎல் போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தும் நாளுக்காகக் காத்திருப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com