பாகிஸ்தான் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்: ஐபிஎல் போட்டியில் எப்போது பங்கேற்பார்?

ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள விரைவில் மும்பைக்கு அவர் வரவுள்ளார்.
பாகிஸ்தான் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்: ஐபிஎல் போட்டியில் எப்போது பங்கேற்பார்?

காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள விரைவில் மும்பைக்கு அவர் வரவுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து இரு அணிகளும் லாகூரில் நடைபெறும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் பங்கேற்கின்றன. டெஸ்டில் பங்கேற்ற பல வீரர்கள் ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டேவிட் வார்னர், ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் போன்றோரும் இல்லை. இந்நிலையில் ஆஸி. வீரர்களான ஜோஷ் இங்லிஷும் அஷ்டன் அகரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அணியில் 13 வீரர்கள் மட்டுமே உள்ள நிலையில் லாகூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

பயிற்சியின்போது இடுப்புப் பகுதியில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காயத்தின் தீவிரம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மும்பைக்கு விரைவில் வரவுள்ளார். எனினும் அவர் எப்போது முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என்கிற விவரம் தெரியவில்லை. 

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் மார்ஷ். ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு மார்ஷை தில்லி அணி தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடர் காரணமாக ஏற்கெனவே முதல் 3 ஐபிஎல் ஆட்டங்களில் மார்ஷ் விளையாட மாட்டார் என்றிருந்த நிலையில் தற்போது மும்பைக்கு வரவுள்ள மார்ஷுக்கு தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட் சிகிச்சையளித்து அவர் காயத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். ஏற்கெனவே தில்லி அணியில் தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் நோர்கியாவும் காயத்துக்கான சிகிச்சையில் உள்ளார். மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இரு வெளிநாட்டு வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு விளையாடி வெற்றி பெற்றது தில்லி அணி. 

காயம் குணமாகத் தாமதமாகி மார்ஷால் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போனால் அது மூன்றாவது வருடமாக அவர் இப்போட்டியைத் தவறவிடும் சூழல் ஏற்படும். 2020-ல் சன்ரைசர்ஸுக்காக முதல் ஆட்டத்தில் விளையாடியபோது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். கடந்த வருடம் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து விலகினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com