ஐபிஎல்: தமிழக வீரர்கள் எப்படி விளையாடி வருகிறார்கள்?

இந்த வருடப் போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
ஷாருக் கான்
ஷாருக் கான்

ஐபிஎல் போட்டி தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. இந்த வருடப் போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை 47 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் எத்தனை தமிழக வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது? கிடைத்த வாய்ப்புகளை யார் யார் சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். தமிழக அணி இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியை வென்றதோடு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. இதனால் இந்த வருட ஏலத்தில் தமிழக வீரர்கள் அதிக அளவில் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது.

ஷாருக் கான், சாய் கிஷோர், எம். அஸ்வின் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் மிகவும் ஆர்வம் காண்பித்தன. ஐபிஎல் ஏலத்தில் 13 தமிழக வீரர்களை அணிகள் தேர்வு செய்தன. ஏலத்துக்கு முன்பு, தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். 

ஐபிஎல் ஏலத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளிலிருந்து தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வானார்கள். ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி. அடுத்த இடத்தில் ராஜஸ்தான். 9 வீரர்கள் ரூ. 33.45 கோடிக்குத் தேர்வானார்கள். 

ஏலத்தில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய அதிக அணிகள் போட்டியிட்ட புள்ளிவிவரத்தில் தமிழகத்தின் சாய் கிஷோரும் உள்ளார். தீபக் ஹூடா, சாய் கிஷோர், டிம் டேவிட் என மூன்று வீரர்களையும் தேர்வு செய்ய அதிகபட்சமாகத் தலா 6 அணிகள் போட்டியிட்டன. சாய் கிஷோர் ரூ. 3 கோடிக்கும் டிம் டேவிட் ரூ. 8.25 கோடிக்கும் தீபக் ஹூடா ரூ. 5.75 கோடிக்கும் தேர்வானார்கள். இவர்களில் சாய் கிஷோரையும் தீபக் ஹூடாவையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயன்று பிறகு தொகை அதிகமானதால் போட்டியிலிருந்து விலகியது. 

ஐபிஎல் 2022 போட்டியில் தமிழக வீரர்கள்

தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர்

வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
4. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
5. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
6. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
7. எம். அஸ்வின் (மும்பை) - ரூ. 1.60 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சஞ்சய் யாதவ் (மும்பை) - ரூ. 50 லட்சம்
10. பாபா இந்திரஜித் (கேகேஆர்) - ரூ. 20 லட்சம்
11. என். ஜெகதீசன் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம்
12. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம் 
13. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2022 போட்டியில் தமிழக வீரர்கள் எப்படி விளையாடினார்கள்?

1. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்)

பந்துவீச்சு - 8 ஆட்டங்கள், 4 விக்கெட்டுகள், எகானமி - 8.82

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வானார் வருண் சக்ரவர்த்தி. இந்த வருடம் ஐபிஎல் அணியால் தக்கவைக்கப்பட்ட ஒரே தமிழக வீரர். அவர் எப்படி விளையாடி வருகிறார்?

8 ஆட்டங்களில் விளையாடியுள்ள வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். எகானமி - 8.82. 

கேகேஆர் அணி போட்டியின் நடுவில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றதாலும் வருண் சக்ரவர்த்தி மோசமாகப் பந்துவீசியதாலும் சமீபத்தில் கேகேஆர் அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. நேற்று ராஜஸ்தானைத் தோற்கடித்தது கேகேஆர். வருணுக்குப் பதிலாக விளையாடிய அனுகுல் ராய் நன்றாகப் பந்துவீசியதால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் வருணுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ் ஐயரும் தற்போது கேகேஆர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருவருமே அந்த அணியால் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்டவர்கள். 

2. ஷாருக் கான் (பஞ்சாப்)

பேட்டிங் - 7 இன்னிங்ஸ், 98 ரன்கள், ஸ்டிரைக் ரேட் 100.00.

டி20, ஒருநாள், ரஞ்சி கோப்பை என அனைத்திலும் சிறப்பாக விளையாடியதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் தமிழக வீரர் ஷாருக் கான் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். எனினும் 11 பேரில் ஒருவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஐபிஎல் ஏலத்தில் ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் ஷாருக் கான். பிறகு இந்திய அணிக்குத் தேர்வானதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தினார். கடைசியில் ஏலத்தில் பஞ்சாப் அணி ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. தேசிய அணியில் இடம்பெறாத வீரர்களில் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களில் ஷாருக் கானுக்கு 2-ம் இடம் கிடைத்தது. (அவேஷ் கான் ரூ. 10 கோடிக்குத் தேர்வானார்.)

கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 11 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 134.21. 10 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்தமுறை பஞ்சாப் அணி ஷாருக் கான் மீது பெரிய நம்பிக்கை வைத்தது. ஆனால் 7 ஆட்டங்களில் விளையாடிய ஷாருக் கான், 98 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 100.00 மட்டுமே. கடைசி ஓவர்களில் சிக்ஸர்களாக அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான், 98 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் பஞ்சாப் அணி சமீபத்திய ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டது. இனிவரும் ஆட்டங்களிலும் ஷாருக் கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. 

3. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்)

பேட்டிங் - 6 ஆட்டங்கள், 4 இன்னிங்ஸ், 63 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 185.29.

பந்துவீச்சு - 6 ஆட்டங்கள், 4 விக்கெட்டுகள், எகானமி - 8.00.

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த மூன்று ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. இப்போது மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கேவுக்கு எதிராக வாஷிங்டனால் பந்துவீச முடியவில்லை. இதுபற்றி சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது: இதற்கு முன்பு காயம் ஏற்பட்டு தையல் போட்ட அதே கையில் வாஷிங்டன் சுந்தருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் குணமடைந்து விட்டாலும் அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தையல் போட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரால் பந்துவீச முடியவில்லை. மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதனால் அவருடைய பந்துவீச்சு இல்லாமல் 20 ஓவர்களை முடிக்க வேண்டியிருந்தது. முதல் 10 ஓவர்களில் வாஷிங்டனின் பந்துவீச்சு எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும் என்றார்.

தற்போது ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த ஆட்டங்களில் வாஷிங்டன் இடம்பெறுவாரா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

அடிக்கடி காயம் ஏற்படுவதால் இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணிக்குச் சேர்ப்பதில் நிறைய தயக்கம் ஏற்படும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தக் கடினமான காலக்கட்டத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி)

பேட்டிங் - 10 இன்னிங்ஸ், 218 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 194.64.

இந்த வருடம் தினேஷ் கார்த்திக்குக்குத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. பல தருணங்களில் கடைசிக்கட்டங்களில் அற்புதமாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு உதவியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் எதிர்பார்க்கிறார்கள். டிகேவும் அதே கனவில் தான் உள்ளார். 

23 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததால் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது. ஆட்ட நாயகன் விருதும் தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது. ஆட்டம் முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

என் திறமைக்கு நான் நியாயம் செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருந்தேன். கடந்த வருடம் நான் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். நான் பயிற்சி எடுப்பது வேறுவிதமாக இருக்கும். என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். என்னிடம் லட்சியம் உண்டு. ஏதாவது சாதிக்க விரும்புகிறேன். நான் பல மணி நேரம் எடுக்கும் பயிற்சி முறைகளை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு முன்பு எடுத்த பயிற்சிகளே இதுபோன்று விளையாடுவதற்குக் காரணம். நான்கு நாள் கிரிக்கெட் ஆட்டங்களை நான் விளையாடுவதில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன் என்றார். 

பாண்டியா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், தெவாதியா என இந்திய கிரிக்கெட்டில் நான்கு பலமான ஃபினிஷர்கள் உள்ளார்கள். 

5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்)

பேட்டிங் - 7 இன்னிங்ஸ், 83 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 145.61.
பந்துவீச்சு - 10 ஆட்டங்கள், 8 விக்கெட்டுகள், எகானமி - 7.10.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பங்களித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு மிகவும் உதவி வருகிறார் அஸ்வின். அஸ்வின் - சஹால் என்கிற சுழற்பந்துவீச்சுக் கூட்டணி எதிரணி பேட்டர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

மேலும், ஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின். இந்தச் செயல் கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டியில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் முதல்முதலாக ஆட்டமிழந்தவர் அஸ்வின். இதனால் இனி வரும் ஆட்டங்களில் இதைப் பல அணிகள் பின்பற்றும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சஹால், குல்தீப் யாதவ், பிஸ்னாய் ஆகிய வீரர்களைத் தாண்டி இந்திய டி20 அணியில் அஸ்வினுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா?

6. நடராஜன் (சன்ரைசர்ஸ்)

பந்துவீச்சு - 9 ஆட்டங்கள், 17 விக்கெட்டுகள், எகானமி - 8.65.

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த நடராஜன், தற்போது 3-ம் இடத்தில் உள்ளார். 

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார் நடராஜன். ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு ஏப்ரல் மாத இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தயாராக இருந்தார் நடராஜன். ஆனால் அங்கு சென்றபிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியிலும் அவரால் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. 

அதனால் இந்தமுறை ஒரு லட்சியத்துடன் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் நடராஜன். வழக்கம்போல கடைசி ஓவர்களில் அற்புதமாக யார்க்கர்களை வீசி பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார். விக்கெட்டுகளும் அதிகமாக எடுத்து வருவதாலும் விரைவில் இந்திய அணிக்குத் தேர்வாகி அப்படியே டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பெறுவார் எனப் பலரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

7. எம். அஸ்வின் (மும்பை)

பந்துவீச்சு - 6 ஆட்டங்கள், 6 விக்கெட்டுகள், 7.80.

மும்பை இந்தியன்ஸ் அணி, எம். அஸ்வினைத் தேர்வு செய்தபோது அது அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவமாக மும்பை அணி மோசமான விளையாடிய தருணத்தில் அந்த அணியில் இடம்பெற்றுவிட்டார் எம். அஸ்வின்.

இதனால் முதல் 6 ஆட்டங்களில் எம். அஸ்வினுக்கு வாய்ப்பளித்த மும்பை அணி தற்போது வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோகீன் ஆகிய இருவரும் சிறப்பாகப் பந்துவீசி மும்பை அணியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் இனிமேல் எம். அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமம் என்று அறியப்படுகிறது.

8. விஜய் சங்கர் (குஜராத்)

பேட்டிங் - 4 இன்னிங்ஸ், 19 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 54.28.

குஜராத் அணி மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் அந்த அணியில் இடம்பெற்றுள்ள விஜய் சங்கருக்கு இந்த வருட ஐபிஎல் போட்டி நல்லவிதமாக அமையவில்லை. 

விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைத்து நடுவரிசையில் விளையாட பாண்டியா வாய்ப்பளித்தும் அதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 4 ஆட்டங்களிலும் மோசமாக விளையாடியதால் சமீபத்திய ஆட்டங்களில் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை.  

9. பாபா இந்திரஜித் (கேகேஆர்) 

பேட்டிங் - 2 இன்னிங்ஸ், 21 ரன்கள், 87.50.

கேகேஆர் அணி, திடீரென பாபா இந்திரஜித்துக்கு வாய்ப்பளித்து வருகிறது. விக்கெட் கீப்பர் பேட்டராக உள்ளதால் கூடுதல் பொறுப்புகள். கிடைத்த இரு வாய்ப்புகளையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா? 

ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனாலும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் அபாரமாக விளையாடினார். விளையாடிய 3 ஆட்டங்களிலும் சதங்கள் அடித்தார். கூடுதலாக ஒரு அரை சதமும். 3 ஆட்டங்களில் 396 ரன்கள் எடுத்தார். சராசரி - 99.00.

27 வயது இந்திரஜித்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார் இந்திரஜித். கூடுதலாக விக்கெட் கீப்பர் என்கிற பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. 

முதல் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த இந்திரஜித் திடீரென குல்தீப் யாதப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆன் பகுதியில் கேட்ச் கொடுத்து 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் தனக்கு அளிக்கப்பட்ட அறிமுக வாய்ப்பை வீணடித்தார். இருந்தும் இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கிய இந்திரஜித், 2 பவுண்டரிகள் அடித்து 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். சுறுசுறுப்பாக ஓடி சிங்கிள் ரன்னை எடுத்தார். விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் இந்திரஜித்துக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

10. சாய் சுதர்சன் (குஜராத்)

பேட்டிங் - 3 இன்னிங்ஸ், 66 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 124.52.

ஐபிஎல் 2022 போட்டியில் நெ.1 அணி - குஜராத். அந்த அணியில் இடம்பெற்று இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிவிட்டார் 20 வயது சாய் சுதர்சன். முதல் இரு ஆட்டங்களில் 35, 11 என ரன்கள் எடுத்தார். ஆனால் விரைவாக ரன்கள் எடுக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியில் மீண்டும் இடம்பெற்ற சாய் சுதர்சன், 20 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ஓரளவு உதவினார். இதனால் இனிவரும் ஆட்டங்களில் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகளை பாண்டியா அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

11. சாய் கிஷோர் (குஜராத்) 

இந்த ஐபிஎல் போட்டியில் 10 தமிழக வீரர்கள் விளையாடி விட்டாலும் இவருக்கு மட்டும் இன்னும் ஒரு வாய்ப்பும் கிடைக்காதது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. 

உள்ளூர் போட்டிகளில் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ள சாய் கிஷோருக்கு ஐபிஎல் போட்டியில் மட்டும் இடம் கிடைப்பதில் சிக்கலாக உள்ளது. 

2020 ஐபிஎல் ஏலத்தில் சாய் கிஷோரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் இரு வருடங்களிலும் விளையாட சாய் கிஷோருக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. பிறகு இந்திய அணிக்கும் தேர்வானார். அங்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

இம்முறை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. அந்த அணியில் ரஷித் கான் உள்ளதால் அவருக்குச் சரியான இணையாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால் குஜராத் அணியில் உள்ள ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவால் மீண்டும் பெஞ்சில் அமரவேண்டிய நிலைமை சாய் கிஷோருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிலும் தோனிக்கு நிகராக ஆட்டத்தின் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிகளுக்குப் பெரிதும் உதவுவதால் தெவாதியாவை அணியிலிருந்து இனி நீக்கவே முடியாது. ரஷித் கான், தெவாதியா என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் + ஆல்ரவுண்டர்கள் உள்ள அணியில் சாய் கிஷோருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் கிஷோர், தற்போது அணி மாறினாலும் நிலைமை மாறாமல் இருப்பதை என்னவென்று சொல்ல? சமீபத்தில் திருமணமான சாய் கிஷோர், ஐபிஎல் போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தும் நாளுக்காகக் காத்திருப்போம். 

12. சஞ்சய் யாதவ் (மும்பை)

ஆல்ரவுண்டராக உள்ள சஞ்சய் யாதவுக்கு மும்பை அணி வாய்ப்புகள் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மாவின் திட்டங்களில் சஞ்சய் யாதவுக்கு இதுவரை இடமில்லை. 

13, 14. என். ஜெகதீசன் (சிஎஸ்கே), ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)

சிஎஸ்கேவில் புதிய வீரர்களுக்கு அதிலும் புதிய பேட்டர்களுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைக்காது. அதனால் இருவரும் வெளியே இருந்து தான் இதுவரை ஐபிஎல் போட்டியைப் பார்த்து வருகிறார்கள். ஒருவேளை சிஎஸ்கே அணி மேலும் சில ஆட்டங்களில் தோற்று, இனி பிளேஆஃப் வாய்ப்பு இல்லை என உறுதியானால் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தோனி நினைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com