ஐபிஎல்: கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன்

4 ஐபிஎல் ஆட்டங்களில் 131 ரன்கள் எடுத்துள்ளார் சாய் சுதர்சன்.
ஐபிஎல்: கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன்

ஐபிஎல் 2022 போட்டியில் நெ.1 அணி - குஜராத். அந்த அணியில் இடம்பெற்று இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடிவிட்டார் 20 வயது சாய் சுதர்சன். முதல் இரு ஆட்டங்களில் 35, 11 என ரன்கள் எடுத்தார். ஆனால் விரைவாக ரன்கள் எடுக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியில் மீண்டும் இடம்பெற்ற சாய் சுதர்சன், 20 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ஓரளவு உதவினார். இதனால் இனிவரும் ஆட்டங்களில் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகளை பாண்டியா அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல பஞ்சாப் அணிக்கு எதிராக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன், 3-வது ஓவரின்போது விளையாட வந்து பிறகு கடைசிவரை தாக்குப்பிடித்து ஆடி அசத்தினார். குஜராத் அணியின் முக்கிய பேட்டர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோது நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசியில் 50 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 65 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் சாய் சுதர்சன். அணியில் அதிகமாக ரன்கள் எடுத்தது அவர் தான். 

நான் இன்னமும் நன்றாக விளையாடியிருக்கலாம். பரவாயில்லை. நிறைய டாட் பந்துகளால் கொஞ்சம் வீணடித்துவிட்டேன் என்று தன்னுடைய ஆட்டம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வெளிப்படையாகப் பேசினார். மேலும் தங்கள் அணியின் ஸ்கோர், 20 ரன்கள் வரை குறைவாக உள்ளது என்றும் அவர் கூறினார். கடைசியில் அதுதான் நடந்தது. குஜராத் அணி எடுத்த 143 ரன்களை 16 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

4 ஐபிஎல் ஆட்டங்களில் 131 ரன்கள் எடுத்துள்ளார் சாய் சுதர்சன். ஸ்டிரைக் ரேட் - 127.18. குஜராத் அணியில் 4 பேட்டர்கள் மட்டுமே அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். அவர்களில் சாய் சுதர்சனும் ஒருவர். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள இளம் தமிழக வீரர்களில் ஷாருக் கான் பெரிய அளவில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் குஜராத் அணியில் இடம்பெற்றதுடன் கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி வருகிறார் சாய் சுதர்சன். அவருடைய இந்தப் பொறுப்புணர்வு இதர தமிழக வீரர்களுக்கும் பெரிய ஊக்கமாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com