டிஆர்எஸ் இல்லாத இரு ஓவர்கள்: சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்பு

அந்த இரு ஓவர்களிலும் மும்பை அணிக்கும் டிஆர்எஸ் இல்லை தானே என்று மும்பை ரசிகர்கள்...
பும்ரா, உத்தப்பா
பும்ரா, உத்தப்பா

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே அணி.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு சமாளித்து விளையாடி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் மின்சாரப் பிரச்னை காரணமாக டிஆர்எஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இரு ஓவர்களுக்கு இந்த நிலை இருந்தது. இந்தச் சமயத்தில் நடுவர்கள் தவறிழைத்துள்ளார்களோ என எண்ணும் விதத்தில் இரு விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. டிஆர்எஸ் பயன்படுத்த முடியாத காரணத்தால் வீரர்களால் நடுவரின் தவறான முடிவுகளை முறையீடு செய்ய முடியாமல் போனது. 

இரு ஓவர்களுக்குப் பிறகு டிஆர்எஸ் பிரச்னை சரியானது. அதற்குள் சிஎஸ்கே இரு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த இரு ஓவர்களிலும் ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாத காரணத்தால் இரு அவுட்களும் டிஆர்எஸ்-சில் எப்படிக் காண்பிக்கப்பட்டிருக்கும் என யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் ரீபிளே-யில் பார்த்தபோது கான்வே எதிர்கொண்ட பந்து லெக் சைட் பக்கம் செல்வதாக இருந்தது. இதனால் அவர் நிச்சயம் மூன்றாம் நடுவரால் காப்பாற்றப்பட்டிருப்பார் என்றே தோன்றியது. உத்தப்பாவுக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூ முடிவையும் 50-50 எனச் சந்தேகத்துடனே அணுகவேண்டியிருக்கிறது. 

டிஆர்எஸ் இல்லாதபோது இரு விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்ததுடன் அந்த இரு விக்கெட்டுகளிலும் நடுவர்களின் முடிவு சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். சமூகவலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்கள். முன்னாள் வீரர் சிவராம கிருஷ்ணன் ட்விட்டரில், இரு அணிகளுக்கும் முழு ஆட்டத்துக்கும் டிஆர்எஸ் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

அந்த இரு ஓவர்களிலும் மும்பை அணிக்கும் டிஆர்எஸ் இல்லை தானே என்று மும்பை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாதிட்டாலும் பொதுவாக நடுவரின் தவறான முடிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது பேட்டர்களே. இதனால் தான் நேற்றைய சூழலில் சிஎஸ்கே அணி தான் அதிகப் பாதிப்புக்கு ஆளானது. ஆனால் இந்தச் சிக்கலை சிஎஸ்கே அணி பெரிய அளவில் சர்ச்சை செய்யவில்லை. வழக்கமான ஒரு விஷயமாக எளிதாகக் கடந்துவிட்டது. மேலும் இதனால் மட்டும் சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்கவில்லை, மிக மோசமாகவும் விளையாடிய காரணத்தால் பிரச்னையைப் பெரிது பண்ணவில்லை. 

டிஆர்எஸ் பிரச்னை இல்லாமல் போயிருந்தால் சென்னை தோற்றிருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தங்களுக்கு அநியாயம் நடந்துள்ளது என்று ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரும் எண்ணும்படி நேற்றைய சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com