முகப்பு விளையாட்டு ஐபிஎல்
கடவுளிடம் நீதி கேட்ட விராட் கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!
By DIN | Published On : 14th May 2022 12:27 PM | Last Updated : 14th May 2022 03:47 PM | அ+அ அ- |

சதத்துக்கு மேல் சதமாக அடித்துக் கொண்டிருந்த வீரர் விராட் கோலி. இன்றைய தேதியில் ஒரு அரை சதத்துக்கே போராடிக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் நிம்மதியின்றி இருக்கிறார் என்பதை நேற்று ரசிகர்கள் உணர்ந்தார்கள்.
பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி. ஆட்டமிழந்த பிறகு அவர் கோபத்துடன் வானத்தைப் பார்த்து ஏதோ பேசியபடி சென்றது ரசிகர்களை உறைய வைத்தது. தன்னுடைய மோசமான காலக்கட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையா எனக் கடவுளைப் பார்த்து அவர் கேட்டது போல இருந்தது. இதுபோல கோலியைப் பரிதாப நிலையில் ரசிகர்கள் பார்த்ததேயில்லை என்பதால் இக்காட்சியைக் கண்டு அவர்கள் உடைந்து போனார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் சுறுசுறுப்பாகவே தொடங்கினார் கோலி. 2-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார். அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆஹா, பழைய கோலி வந்துவிட்டார் என ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் 4-வது ஓவரில் ஃபைன் லெக் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி. அவர் 20 ரன்கள் எடுத்தும் யாருக்கும் அதில் திருப்தியில்லை. லெக் சைட் பக்கம் விளையாட முயன்றபோது பந்து அவருடைய கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. இதனால் மிகவும் நொந்து போனார் கோலி. எப்படி எப்படியெல்லாம் தான் ஆட்டமிழக்க வேண்டியிருக்கிறது எனக் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றார். அதனால் தான் ஓய்வறைக்குச் செல்லும்போது வானத்தைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே சென்றார்.
எனக்குக் கொஞ்சம் நீதி வழங்கு என (வானை நோக்கிக்) கேட்கிறார். அது விரைவில் நடக்கலாம் என்று வர்ணனையில் கூறினார் ஹர்ஷா போக்ளே.
திறமை இருக்கிறது, ஆனால் அதை ஆடுகளத்தில் செலுத்த முடியவில்லை, நினைத்தது போல ரன்கள் எடுக்க முடியவில்லை என்பதுதான் கோலியின் பெரிய மனக்குறையாக உள்ளது. அதனால் தான் நேற்று தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தி விட்டார்.
எல்லா இரவும் விடியும். கோலி மீண்டும் சதம் சதமாக எடுப்பார். அனைவரும் காத்திருப்போம்.