இது நம்ம விராட் கோலியல்ல: சேவாக்
By DIN | Published On : 28th May 2022 12:34 PM | Last Updated : 28th May 2022 12:34 PM | அ+அ அ- |

விராட் கோலி அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளைவிட நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக தவறுகளை செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை வருடங்களாக சதம் அடிக்காத விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 16 ஆட்டங்களில் 341 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.73. பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியே குறைவான ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க | பட்லர் மீண்டும் சதம்: கோலி சாதனை சமன்
அவரது செயல்பாடு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் கூறியதாவது:
"இது நமக்குத் தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடுகிறார். இந்த சீசனில் செய்த தவறுகளை அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்ததில்லை.
ரன்கள் குவிக்காதபோது இதுபோன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டமிழப்பதற்கு நேரிடும். இந்த சீசனில், அனைத்து விதமான முறையிலும் கோலி ஆட்டமிழந்துள்ளார்."