ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்றது. 

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தயாள் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தூக்கியடிக்க சாய் கிஷோரிடம் பந்து சிக்கியது. இதனால் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 

அதிரடியாக ஆடிவந்த ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். எனினும் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தொடர்ந்து வந்த படிக்கல் (2), ஹிட்மயர் (11), அஸ்வின் (6), போல்ட் (11) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன் விகிதம் மந்தநிலையிலேயே இருந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இந்நிலையில், 131 ரன்களை இலக்காக வைத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களமிறங்கினர். ராஜஸ்தானின் அபாரமான பந்துவீச்சால் சஹா 5 ரன்னிலும் மேத்யூவ் வேட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில்லின் நிதான ஆட்டத்தில் ரன்கள் அதிகரித்தன. 

இறுதியில் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 133 ரன்களைக் குவித்து குஜராத் அணி கோப்பையை வென்றது. சுப்மன் கில் 45 ரன்களிலும் டேவிட் மில்லர் 32 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சாளர் சஹால் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மேலும், ஐபிஎல்-லில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com