
ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையின்படி ஒரு அணி பிளேயிங் லெவனை தவிர்த்து கூடுதலாக ஒருவரை இம்பாக்ட் வீரராக களமிறக்கிக் கொள்ள முடியும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை மீது ரோஹித் சர்மா, அக்ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இம்பாக் பிளேயர் விதிமுறை உண்மையில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக அமைந்துள்ளது. ஏனெனில், கிரிக்கெட் விளையாட்டு 11 வீரர்களால் விளையாடப்படுவது 12 வீரர்களால் அல்ல. அதனால், இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு நான் மிகப் பெரிய ரசிகன் கிடையாது. ஆட்டத்தில் சுவாரசியம் வேண்டும் என்பதற்காக வீரர்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இம்பாக் பிளேயர் விதிமுறையை ஆதரித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் ஆட்டங்கள் வெற்றிக்கு மிகவும் அருகில் சென்று கூட மாற்றடைகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி பேசியதாவது: எந்த ஒரு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த விதிமுறை ஏன் சரியில்லை என தங்களது விளக்கத்தைக் கொடுக்க ஆள்கள் இருப்பார்கள். ஆனால், போட்டிகளில் 200 மற்றும் 190 போன்ற ரன்கள் குவிப்பதைப் பார்க்கும்போது மற்றும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை பார்க்கும்போது அந்த விதிமுறை தொடர்பான அவர்களது பார்வை மாறும். விளையாட்டு என்பது காலத்துக்கு ஏற்றாற் போல வளர்ச்சியடைய வேண்டும். இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நல்ல விதிமுறையே. இதுபோன்ற விதிமுறைகள் மற்ற விளையாட்டுகளிலும் உள்ளன என்றார்.
இம்பாக்ட் பிளேயர் விதிமுறை குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அண்மையில் பேசியதாவது: இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நிரந்தரமானது அல்ல. சோதனை முயற்சியாக இந்த விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த விதிமுறையில் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால், இந்த விதிமுறையின் மூலம் ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். இந்த விதி நிரந்தரமானது அல்ல, அதற்காக இந்த விதி நீக்கப்படும் எனப் பொருளல்ல. இந்த விதிமுறை ஆட்டத்தை மேலும் சிறப்பாக்குகிறது. இந்த விதிமுறை சரியல்ல என வீரர்கள் கூறினால், அவர்களிடம் நாங்கள் பேசுவோம். ஆனால், இதுவரை எங்களிடம் யாரும் எதுவும் கூறவில்லை. அதனால், இது குறித்து உலகக் கோப்பைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.