
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலியை மீண்டும் நியமிக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 661 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலியை மீண்டும் நியமிக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டால், அணி நிர்வாகம் இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். அவர்கள் ஏன் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிக்கக் கூடாது? சென்னை அணியில் மகேந்திர சிங் தோனி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதுபோல, பெங்களூரு அணியில் விராட் கோலி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவர் மிகச் சிறந்த தலைவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வருகிறது. விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்துவதை பார்க்க விரும்புகிறேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.