
டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் என இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 26) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையைப் போல டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: நான் முதலில் நொய்டாவுக்கு செல்ல உள்ளேன். அதன்பின் உலகக் கோப்பைத் தொடருக்காக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளேன். நான் உலகக் கோப்பையை கையிலேந்துவதையும் நீங்கள் பார்ப்பீர்கள். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு ஒருவரை மட்டும் பாராட்ட முடியாது. வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கௌதம் கம்பீர் வந்தவுடன் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர். கடந்த 5-6 போட்டிகளாக வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.