
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியது. 9-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே தற்போது 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே, வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் தடுமாறி வருகிறது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்க இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.