
அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்ததாக ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவின் மிகப் பெரிய ரசிகன் நான்: பாட் கம்மின்ஸ்
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மனம் திறந்த அபிஷேக் சர்மா
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, அணியின் வெற்றி குறித்து மனம் திறந்துள்ளார்.
போட்டி நிறைவடைந்த அபிஷேக் சர்மா பேசியதாவது: இந்த மாதிரியான ஃபார்மில் விளையாடுவது எந்த ஒரு வீரருக்கும் எளிது கிடையாது. நான் சரியாக விளையாடாதபோதும், அணி நிர்வாகமும் கேப்டன் பாட் கம்மின்ஸும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். எனக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். ஆடுகளத்துக்கு பின்புறம் நான் ஒருபோதும் ஷாட்டுகள் விளையாடியதில்லை. இருப்பினும், ஆடுகளத்தில் இருந்த பௌன்சின் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை விளையாடினேன்.
ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் அணிக்குள் அதிகம் ஆலோசனையில் ஈடுபடவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. சன்ரைசர்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது. யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.