
நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுக்க, அவருக்குப்பின்னர் வந்த மயாங் அகர்வால் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார்.
விராட் கோலி - மயாங் இருவரும் நிதானமாக விளையாடினாலும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தயங்கவில்லை. மயாங் அகர்வால் 18 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 24 ரன்களில் சஹாலிடம் வீழ்ந்தார்.
கேப்டன் ரஜத் படிதார் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி, அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஒமர்ஸாயிடம் வீழ்ந்து ஏமாற்றமளித்தார்.
கடைசி ஆட்டம் போன்றே அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங், பெங்களூரு வீரர்கள் ஷெபர்ட், புவனேஷ்வர், க்ருனால் பாண்டியா மூவரது விக்கெட்டையும் தூக்கினார்.
200 ரன்களை தொடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் சொதப்பிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களில் அடங்கியது.
பஞ்சாப் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஒமர்ஸாய், வைசாக் விஜயகுமார், சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையும் படிக்க: இறுதி யுத்தத்தில் பஞ்சாப் vs பெங்களூரு! ஐபிஎல் செய்திகள் நேரலை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.