ராகுலின் நிதானமான சதத்தால் வெற்றி வாய்ப்பை இழந்ததா பஞ்சாப் அணி?
By DIN | Published On : 11th April 2019 03:05 PM | Last Updated : 11th April 2019 05:58 PM | அ+அ அ- |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்து "த்ரில்' வெற்றி கண்டது. அந்த அணி வீரர் பொலார்டு 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்நிலையில் பொலார்டின் அதிரடி பேட்டிங் பஞ்சாப்பின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தாலும் பஞ்சாப் அணி நிதானமாக ஆடியதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்தார் பஞ்சாப் அணியின் பஞ்சாப் தொடக்க வீரர் கேஎல் ராகுல். இது ஐபிஎல் போட்டியின் 4-வது நிதானமான சதமாக அமைந்துவிட்டது. மணீஷ் பாண்டே 67 பந்துகளிலும் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 66 பந்துகளிலும் பீட்டர்சன் 64 பந்துகளிலும் விராட் கோலி 63 பந்துகளிலும் சதமடித்துள்ளார்கள். இந்நிலையில் நிதானமாகச் சதமடித்தவர்களின் பட்டியலில் ராகுலும் தற்போது இணைந்துள்ளார்.
முதல் 50 ரன்கள் எடுக்க 41 பந்துகளை எடுத்துக்கொண்டார் ராகுல். மேலும் பேட்டிங் செய்தபோது 13 ஓவர் முதல் 17 ஓவர்கள் வரை பஞ்சாப் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் 11 முதல் 17 ஓவர்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் இதுபோல முக்கியமான கட்டத்தில் நிதானமாக விளையாடியது பஞ்சாப் அணிக்குப் பிறகு வினையாக அமைந்துவிட்டது.