நண்பேன்டா: ஒலிம்பிக்ஸில் தங்கத்தைப் பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்! ரசிகர்கள் ஆச்சர்யம்!

இருவரும் மூன்று முறை முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை. 
தம்பேரி (இடது) - பார்ஷிம்
தம்பேரி (இடது) - பார்ஷிம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் நெருங்கிய நண்பர்களான இரு போட்டியாளர்களும் தங்கத்தைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கத்தாரைச் சேர்ந்த முதாஸ் எஸா பார்ஷிம், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலமும் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர். 2017, 2019 உலக ஃபைனல்ஸ் போட்டியில் தங்கம் வென்றார். உயரம் தாண்டுல் போட்டியில் மகத்தான வீரராக அறியப்படுகிறார். 

இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி, இதற்கு முன்பு வரை ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றதில்லை. 

இருவரும் நெருங்கிய நண்பர்கள். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் இருவரும் பங்கேற்று தங்கப் பக்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். காரணம் - நட்பு.

காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் தம்பேரியால் பங்கேற்க முடியவில்லை. பார்ஷிமும் காயத்தால் ஒரு வருடம் போட்டிகளில் பங்கேற்காமல் பிறகு 2019-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். ரியோவில் பங்கேற்க முடியாத தம்பேரிக்கு டோக்கியோவில் சாதித்துக்காட்ட வேண்டிய லட்சியம் இருந்தது. ஒலிம்பிக்ஸில் வெள்ளி, வெண்கலம் வென்ற பார்ஷிமுக்குத் தங்கம் கட்டாயம் அவசியம். ஒரு மகத்தான வீரரிடம் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இல்லாமல் இருந்தால் எப்படி?

நேற்று நடைபெற்ற போட்டியில் இருவரும் கடுமையாகப் போட்டியிட்டார்கள். இருவரும் சம அளவிலான உயரத்தைத் தாண்டி தங்கத்தைக் குறி வைத்தார்கள். கடைசிக் கட்டம் வந்தது. 2.39 மீ. உயரத்தை யார் தாண்டுகிறார்களோ அவர்களுக்குத் தங்கம் உறுதி.

இருவரும் மூன்று முறை முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை. 

இருவரும் ஒரே அளவிலான உயரத்தைத் தாண்டியதால் ஜம்ப் ஆஃப் என்கிற முறையை நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதில் அதிக உயரம் தாண்டும் வீரர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆனால் பார்ஷிம் வேறொரு திட்டம் வைத்திருந்தார். 

இரு தங்கம் வழங்க முடியுமா என நடுவர்களிடம் கேட்டார். முடியும் என்றார்கள். இதை தம்பேரியிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டு எம்பிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2017 முதல் நண்பர்களாக உள்ள இருவரும் ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் மகத்தான தருணத்தை உருவாக்கினார்கள். 

என் திறமையை வெளிப்படுத்தியதற்காகத் தங்கம் வெல்வதற்கு நான் உரியவன். அவரும் அதையே செய்தார். அவருக்கும் தங்கம் கிடைக்கவேண்டும். இது விளையாட்டுக்கு அப்பாற்பட்டது. இந்தக் கருத்தை இளம் தலைமுறையினருக்குக் கூற விரும்புகிறோம். இதுபோல நடந்தால் என்ன செய்யவேண்டும் என்று முன்பு ஓரளவில் பேசியுள்ளோம். அது நிஜமாகவே நடந்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார் பார்ஷிம். 

2016-ல் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு என்னால் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்றார்கள். இப்போது தங்கம் வென்றுள்ளேன். நம்பமுடியாமல் உள்ளேன். ஒலிம்பிக் தங்கத்தை நண்பருடன் பகிர்ந்துகொள்வது அற்புதமானது என்கிறார் தம்பேரி. 

நட்பும் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை ஒலிம்பிக் களத்தில் நிரூபித்துள்ளார்கள் இருவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com