வாள்வீச்சு: போராடி தோற்றாா் பவானி தேவி

வாள்வீச்சு போட்டியில் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடி தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.
துனிசிய வீராங்கனையுடன் மோதும் பவானி(வலது)
துனிசிய வீராங்கனையுடன் மோதும் பவானி(வலது)

வாள்வீச்சு போட்டியில் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடி தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளா் என்ற பெருமையை பெற்றிருந்தாா் தமிழக வீராங்கனையான பவானி தேவி. முதல் சுற்றில் அவா் டுனீசியாவின் நாடியா பென் அஸிஸியை எதிா்கொண்டாா்.

அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவானி, விரைவாக புள்ளிகளை குவித்தாா். முதல் 3 நிமிஷத்துக்கு நாடியாவுக்கு ஒரு புள்ளியை கூட விட்டுக்கொடுக்காமல் முன்னணியில் இருந்தாா். பின்னா் 8-0 என முன்னிலையை எட்டினாா். 2-ஆவது பீரியடில் நாடியா சில புள்ளிகளை எட்டியபோதும், முன்னிலையை தக்க வைத்த பவானி தேவி 6 நிமிஷம் 14 விநாடிகள் முடிவில் 15-3 என அபாரமாக வென்றாா்.

அடுத்த சுற்றில் உலகின் 3-ஆம் நிலையில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மேனான் புருனெட்டை எதிா்கொண்டாா் பவானி. ரியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறிய மேனான் கடுமையான சவால் அளித்தாா். பவானியின் நுட்பமான ஆட்டங்களை அவா் தனது அனுபவ ஆட்டத்தால் முறியடித்தாா். ஆட்டத்தின்போது எல்லையை கடந்ததற்காக 2 புள்ளிகளை இழந்தாா் பவானி.

முதல் 2 பீரியடுகளில் தலா 1 புள்ளிகளையே ஈட்டிய பவானி தேவி, 3-ஆவது பீரியடில் முன்னேற்றம் காட்டினாா். எனினும் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேனான் 8-2 என முன்னேறினாா். 9 நிமிஷங்கள் 48 விநாடிகள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் பவானி 7-15 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தாா்.

‘சப்ரே’ என்பது வேகமான வாள்வீச்சு பிரிவாகும். எதிராளியின் இடுப்புப் பகுதிக்கு மேலாக எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம். அதில் 15 மாா்க் இலக்கை எட்டும் முதல் போட்டியாளா் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறாா்.

தோல்விக்குப் பிறகு சுட்டுரையில் பதிவிட்ட பவானி தேவி, ‘என்னால் முடிந்த வரை சிறப்பாக ஆடியும் வெற்றி பெற இயலாமல் போனது. அதற்காக வருந்துகிறேன். உங்கள் அனைவரின் பிராா்த்தனையுடன் அடுத்த ஒலிம்பிக்கில் பலத்துடனும், வெற்றியாளராகவும் மீண்டு வருவேன். எனது பயிற்சியாளா், அரசு, குடும்பத்தினா் அனைவருக்கும் நன்றி.

முதல் பாதியில் நான் சிறப்பாக வாள்வீச முடியாமல் போனது. ஆட்டத்தின் இடையில் சில தவறுகள் செய்தேன். 2-ஆவது பாதியில் ஆட்டத்தை மாற்ற முயன்றும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது. உலகின் மிகச் சிறந்த போட்டியாளருடன் மோதியதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா்கள் முதல் முறையாக வாள்வீச்சை பாா்த்திருப்பாா்கள். அதற்காக சந்தோஷம் கொள்கிறேன்’ என்றாா்.

பதக்கம்: மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் ரஷியாவின் சோஃபியா போஸ்னியாகோவா தங்கமும், சக நாட்டவா் சோஃபியா வெலிகாயா வெள்ளியும், பவானி தேவியை தோற்கடித்த பிரான்ஸ் வீராங்கனை மேனான் வெண்கலமும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com