அழ வேண்டாம்: இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு போனில் ஆறுதல் கூறிய பிரதமர் (விடியோ)

அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவது எனக்குக் கேட்கிறது. உங்களால் நாடு பெருமை கொள்கிறது.
அழ வேண்டாம்: இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு போனில் ஆறுதல் கூறிய பிரதமர் (விடியோ)

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரையிறுதி வரை முன்னேறி 4-ம் இடம் பிடித்த இந்திய ஹாக்கி அணி வீராங்கனைகளிடம் போனில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று சந்தித்தது. 

ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு இந்திய மகளிர் அணி சுறுசுறுப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. ரியோ ஒலிம்பிக்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் 2 கோல்களை அடித்து 4-3 என ஆட்டத்தை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 

ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் பங்கேற்று 4-ம் இடம் பிடித்துள்ளது. 

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி போனில் பேசினார். அதன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

உங்களுடைய வியர்வை நாட்டின் பல கோடி பெண்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

கண்ணுக்கு அருகே நான்கு தையல் போட்டிருந்த நவ்னீத் கெளரிடம் நலம் விசாரித்தார் மோடி. இதுபோன்று ஊக்கமளிப்பதற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்தார் கேப்டன் ராணி ராம்பால். பிரதமரிடம் பேசியபோது இந்திய வீராங்கனைகள் கண் கலங்கினார்கள். இதையடுத்து அழுதவதை நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவது எனக்குக் கேட்கிறது. உங்களால் நாடு பெருமை கொள்கிறது. மனம் தளர வேண்டாம். உங்களுடைய கடின உழைப்பால் இந்தியாவில் ஹாக்கிக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது என்றார்.

மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸூர்ட் மரைனே-வையும் மோடி பாராட்டினார். நீங்கள் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள். வீராங்கனைகள் நாட்டுக்கு ஊக்கமளித்துள்ளதை அவர்களிடம் கூறியுள்ளேன். அது மிகவும் முக்கியம். அதை அவர்கள் கொண்டாட வேண்டும். நன்றி என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com