கூடுதலாக இருந்த 100 கிராம்: இந்திய இதயங்களை வென்ற வினேஷ் போகத்!

கூடுதலாக இருந்த 100 கிராம் உடல் எடையால் பதக்கத்தை வெல்ல முடியாமல் போயிருக்கலாம், இந்திய இதயங்களை வென்றார் வினேஷ் போகத்.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்
Published on
Updated on
2 min read

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறியும்கூட, 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இந்திய இதயங்களை வென்றுள்ளார்.

வழக்கமாக 53 கிலோ எடைப் பிரிவில் இடம்பிடிக்கும் வினேஷ் போகத், இந்த முறை 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். தனது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க கடுமையாக போராடி வந்த வினேஷ், நேற்று இரவு 52 கிலோ எடையில் இருந்தார்.

இன்று காலை மருத்துவப் பரிசோதனைகளின்போது அவர் 50 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இரவு முழுக்க உணவு எடுத்துக் கொள்ளாமல் சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது, ஸ்கிப்பிங் என கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 1.85 கிலோ எடையைக் குறைத்தார். அவரால் குறைக்க முடியாமல் விட்ட 100 கிராம், அவரை ஒலிம்பிக் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய காரணமாக அமைந்துவிட்டது.

வினேஷ் போகத்
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்

தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதக்கம் ஏதுமின்றி, வீராங்கனைகளின் தரவரிசையிலும் அவர் கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவார் என்ற செய்தி இந்திய மக்களை பேரிடி போல தாக்கியது. இந்தியக் குழுவும் தனது வருத்துத்தை தெரிவித்திருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர்கள் என தலைவர்கள் தங்களது ஆறுதலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையேதான், இரவு முழுக்க உறங்காமல் கடுமையான பயிற்சி மேற்கொண்ட வினேஷ், நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியானதால், இந்திய மக்கள் வினேஷ் போகத்துக்கு தங்களது மனப்பூர்வமான ஆறுதலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்: 2 கிலோ கூடுதல் உடல் எடை.. இரவு முழுக்க பயிற்சி.. தகுதி நீக்கம்!

அவர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருந்தாலும் கூட, இத்தனை பேரின் இதயங்கள் அவரை நினைத்திருக்காது. அவர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லாத நிலையிலும், இந்திய மக்களின் மனங்களை வென்றிருக்கிறார் என்றே சமூக வலைதள பக்கங்கள் காட்டுகின்றன.

ஒருவர் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், அதில், அந்த கூடுதலாக இருந்த 100 கிராம் எடை, கண்ணுக்குத் தெரியாத, அவர் எப்போதும் அணிந்திருக்கும் பதக்கத்தால் வந்தது என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், இது உண்மையாக இருக்கக் கூடாது என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.

சில வேளைகளில் 100 கிராம் கூட உங்கள் ஒலிம்பிக் கனவை தகர்க்கும்போது அதிக எடையாக மாறிவிடுகிறது. ஒரு சிறு எடை மிகப்பெரிய இதயத்தை நொறுக்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு பலரும் தங்களது வருத்தங்களையும், ஆதங்கத்தையும், வினேஷ் போகத்துக்கு ஆறுதலையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் சிலர், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒரு வெற்றியாளர் என்றும் உத்வேகம் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com