
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்து நலம் விசாரித்தார் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா.
இறுதிப்போட்டிக்கு உடல் எடையைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சி செய்ததில், நீரிழப்பு ஏற்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
50 கிலோ எடைப்பிரிவிலான போட்டியில் பங்கேற்க 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் பிரிவுக்கான மல்யுத்தத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருந்தது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அமெரிக்காவின் சாரா அன் ஹில்ட்பிரான்ட் உடன் மோத இருந்தார். இறுதிப்போட்டிக்கு 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 52 கிலோ எடையில் இருந்ததால் இரவு முழுவதும் தொடர் ஓட்டம், சைக்கிளிங் என கடுமையாக உடற்பயிற்சி செய்து 1.9 கிலோ எடை குறைத்தார். 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால், இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் இந்திய ஒலிம்பிக் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே வினேஷ் போகத்தை சந்தித்த பிறகு பேசிய பி.டி. உஷா, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வினேஷ் போகத்தை சந்திப்பதற்காக வந்தேன். அவர் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் உறுதியாக உள்ளார். மனதளவில் சற்று அதிருப்தியில் உள்ளார். வினேஷ் போகத் உடன் எங்கள் உதவியாளர்கள் இருக்கின்றனர். போகத்தின் எடையைக் குறைக்க அவர்கள் உதவுவார்கள். சிறப்பான பங்களிப்பை அவர்கள் அளிப்பார்கள் என நம்புகிறேன் என பி.டி. உஷா குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.