
உடல் எடையைக் குறைக்க இரவு முழுக்க கடும் பயிற்சிகளை மேற்கொண்ட வினேஷ், தனது தலை முடியைக் கூட வெட்டிக்கொண்டிருக்கிறார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, மருத்துவமனையில் வினேஷ் போகத்தை பி.டி. உஷா சந்தித்த புகைப்படமும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் வினேஷ் தலைமுடி வெட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா, மூத்த மருத்துவ அதிகாரி ஆகியோர் பாரீஸிலிருந்து, விடியோ வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து, வினேஷ் போகத்தை பி.டி. உஷா சந்தித்த புகைப்படமும் வெளியானது.
பாரீஸில் இருக்கும் பி.டி. உஷா கூறுகையில், வினேஷ் தகுதிநக்கம் செய்யப்பட்டது கடுமையான அதிர்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள சிறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினேஷ் போகத்தை சந்தித்துப் பேசினேன். அவருக்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து உதவிகளும் செய்துகொடுக்கப்படும் என்றும், மத்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் உடன் இருப்பதாகவும் உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் உணர்வுப்பூர்வ ஆதரவும் வழங்கப்படும். மேலும், சர்வதேச மல்யுத்த சம்மேளனத்துக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு பதிவு செய்துள்ளோம். போட்டிக்குத் தகுதிபெறும் வகையில், வினேஷ் உடல் தகுதி பெற அவரின் பயிற்சியாளர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நான் அறிவேன் என்று பி.டி. உஷா கூறியிருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில், 29 வயதாகும் வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உடல் எடையைக் குறைப்பதற்கு, தலைமுடியைக்கூட வெட்டியுள்ளனர்.
இது குறித்து வெளியான தகவலில், செவ்வாய்க்கிழமை காலை 49.90 கிலோ எடையிருந்த வினேஷ், அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு இரவு உடல் எடை 52.7 கிலோ என்ற அளவுக்கு அதிகரித்திருந்தது.
உடனடியாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன், அவரது உடற்பயிற்சியாளர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இரவு முழுக்க உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது இரவு முழுவதும் தொடர்ந்தது, உணவோ தண்ணீரோ எடுக்காமல் ஓடினார், ஸ்கிப்பிங் செய்தார், சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.
இது அனைத்தும் ஒரு கட்டத்தில் கைகொடுக்கவில்லை என்று தெரிந்ததும், வினேஷ் தலைமுடியை வெட்டினால் எடை குறையுமா, உடலிலிருந்து ரத்தத்தை வெளியேற்றினால் குறையுமா என்றெல்லாம் ஆராயத் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், எதுவும் எதிர்பார்த்தப் பலனைக் கொடுக்காது என்பது தெரிந்ததும் அனைவரும் கவலையடைந்துள்ளனர். கடைசியாக இன்று காலை 7.15 மணிக்கு அவர் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்தார். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இரவு முழுவதும் உறங்காமல் உணவும் உண்ணாமல் கடும் பயற்சி செய்த வினேஷ், இந்த செய்தி அறிந்ததும் நொறுங்கிப்போனார். மயக்கமடைந்து விழுந்த வினேஷ் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.