
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பத்தக்கம் வென்றுள்ள ஜப்பானின் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் ரே ஹிகுச்சி அமெரிக்காவின் ஸ்பென்சர் ரிச்சர்டு லீயை 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தக்கப்பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக, மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்(29) தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச உடல் எடையைவிட கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது.
இதனைத் தொடர்ந்து, சா்வதேச மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தாா்.
வினேஷ் போகத்துக்கு ஏற்பட்டுள்ள இதே நிலைமை, கடந்த முறை ஒலிம்பிக்கின்போது ஜப்பானின் ரே ஹிகுச்சிக்கு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றபோது, அதில் வெறும் 50 கிராம் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார் ரே ஹிகுச்சி.
இந்த நிலையில், மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வினேஷ் போகத் தனது முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ள ரே ஹிகுச்சி அறிவுறுத்தியுள்ளார்.
வினேஷ் போகத்துக்கு ஆதரவாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ரே ஹிகுச்சி பதிவிட்டுள்ளதாவது, “நீங்கள் எந்த அளவுக்கு வலியை உணருகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இதேபோலத்தான்.. 50 கிராமுக்காக நடந்தது.
இந்த நிலையில், உங்களைச் சுற்றி பேசுபவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். வாழ்க்கை ஒரு தொடர் பயணம்.
‘வீழ்ச்சியிலிருந்து எழுவதே மிக அழகான விஷயம்..’ நன்றாக ஓய்வெடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விஷயம், ஒட்டுமொத்த இந்தியாவின் தங்கப்பதக்க கனவையும் சுக்குநூறாய் உடைத்தது. இந்த நிலையில், உடைந்து போன வினேஷ் போகத்துக்கு ஊக்கமளிக்கும் விதமாய், உலகின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவரான ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்த முறை ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் பதக்கம் வெல்லலாம் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.