ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு சொகுசுக் கார் பரிசாக வழங்கப்பட்டது. அவர், ஈட்டி எறிந்த தூரமான 92.97 மீட்டர் என்ற எண் பதிவு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அவர் அதிகபட்சமாக 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை எறியப்பட்ட அதிகபட்ச தூரம் இதுவாகும்.
ஆக. 11ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நதீமுக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில அரசு சொகுசுக் காருடன், ரூ.10 கோடி பரிசாக வழங்கியது.
இந்நிலையில், அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட சொகுசுக் காருக்கு, 92.97 என்ற எண் பதிவு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்த நிலையில், அதனை பதிவு எண்ணாகவே வைத்து கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நதீமுக்கு அவரின் மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். எருமை மாடுகள் பாகிஸ்தானில் மிகவும் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகின்றன.
உலக தடகள கூட்டமைப்பு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ( இந்திய ரூபாயில் 42 லட்சம்) வழங்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி சுஸுகி கார் பரிசளித்துள்ளார்.