2036ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை எட்டும் என புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பெண்கள் விகிதம் 48.5% ஆக இருந்த நிலையில், சற்று அதிகரித்து 48.8% ஆக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-ல் பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கருவுறுதல் விகிதங்கள் சரிவதால், 2011 முதல் 2036 வரை 15 வயதிற்குட்பட்ட தனிநபர்களின் விகிதம் குறையும் எனத் தெரிகிறது.
இதற்கு மாறாக இந்தக் காலகட்டத்தில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான மக்கள் விகிதம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2036ஆம் ஆண்டு பெண்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2011-ல் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற விகிதம் மாறி, ஆயிரம் ஆண்களுக்கு 952 பெண்கள் என்ற நிலை ஏற்படும். இது பாலின சமத்துவத்தில் இது நேர்மறையான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலை என்ற விரிவான பார்வையையும் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு போன்றவை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின சமத்துவத்தை கணக்கிடுவதில் பாலின தரவுகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன.
இதில், வயதுவாரியான கருவுறுதல் விகிதம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் 2020 வரை 20 - 24 மற்றும் 25 - 29 வயதினரின் கருவுறுதல் விகிதம் முறையே 135.4 மற்றும் 166 லிருந்து 113.6 மற்றும் 139.6 ஆக சரிந்தது. எனினும் 35 - 39 வயதினரிடையேயான கருவுறுதல் விகிதமும் இதே காலகட்டத்தில் 32.7 லிருந்து 35.6 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று இளம்பருவ கருவுறுதல் விகிதமும் குறைந்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 2036ஆம் ஆண்டு 152.2 கோடியாக அதிகரிக்கலாம். அப்போது பெண்கள் விகிதம் சற்று அதிகரித்து 48.8% ஆக இருக்கும். 2011-ல் பெண்கள் விகிதம் 48.5% ஆக இருந்தது.
மேலும், கருவுறுதல் விகிதம் குறையும் என்றும், மூத்த மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரிக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.