ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட முதல் போஸ்டரில் வினேஷ் போகத் இடம்பெற்றிருந்த நிலையில், மற்றொரு போஸ்டரில் அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இந்த தொடரில், பெண்கள் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவுக் குரல் எழுந்தது.
ஆனால், ஒலிம்பிக் அமைப்பு வெள்ளிப் பதக்கம் வழங்க மறுப்பு தெரிவித்ததால், விளையாட்டிற்கான சர்வதேச நீதிமன்றத்தில் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மனு பாக்கர், நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட நன்றி தெரிவிக்கும் போஸ்டரில் வினேஷ் போகத்தின் படமும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், ஜியோ சினிமா வெளியிட்ட மற்றொரு போஸ்டரில் வினேஷ் போகத்தின் படத்தை மட்டும் நீக்கியுள்ளனர்.
பாஜக ஆதரவாளர்கள் வினேஷ் போகத் படத்தை வெற்றி பெற்ற வீரர்களுடன் சேர்த்து வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்ததால்தான், அவரது புகைப்படம் நீக்கப்பட்டதாக இணையத்தில் ஜியோ சினிமாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள நீடா அம்பானிதான் ஜியோ சினிமாவின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.