பதக்கம் வெல்ல உதவியது பகவத் கீதை: மனு பாக்கர்

ஒலிம்பிக் போட்டியில் 10 மீ. துப்பாக்கி சுடுதல் பிரிவில் 22 வயதான மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.
மனு பாக்கர்
மனு பாக்கர் படம்: பாரீஸ் ஒலிம்பிக்
Published on
Updated on
2 min read

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வெல்ல உதவியது பகவத் கீதை என துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் 22 வயதான மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. அதோடு மட்டுமின்றி ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றார்.

வெண்கலப் பதக்கத்துடன் மனு பாக்கர்
வெண்கலப் பதக்கத்துடன் மனு பாக்கர் படம் : பாரீஸ் ஒலிம்பிக்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. இதனால் மனு பாக்கரின் வெண்கலப் பதக்கம் மிகச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும், ககன் நாரங் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர். (தற்போது பாரீஸ் சென்றுள்ள குழுவுக்கு நாரங் தலைமை வகிக்கிறார்)

மனு பாக்கர்
பெருமையடைகிறது இந்தியா: மனு பாக்கருக்கு தலைவர்கள் வாழ்த்து

இதனிடையே இந்தியாவின் முதல் பதக்கம் வெல்ல பகவத் கீதை தனக்கு உதவிகரமாக இருந்ததாக மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

பதக்கம் வென்ற பிறகு அவர் பேசியதாவது,

''இது இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம். அதைப் பெற்றுத்தருவதற்காக மட்டுமே உழைத்தேன். அதிக பதக்கங்கள் பெறுவதற்கான தகுதி உடையது இந்தியா. இம்முறை அதிக பதக்கங்களை வெல்வோம் என எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் இதனைக் கனவு போன்று உணர்கிறேன். கடின முயற்சிகளை மேற்கொண்டேன். கடைசி ஆட்டம் வரையும் கூட என்னிடமிருந்த எல்லா ஆற்றலையும் வெளிப்படுத்தினேன். அது வெண்கலமாக மாறியுள்ளது. அடுத்தமுறை என் உழைப்பை மேலும் மதிப்புடையதாக்குவேன்'' எனக் குறிப்பிட்டார்.

கடைசி நிமிடங்களில் இருந்த மனநிலை குறித்து மனு பாக்கரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''உண்மையில், கீதை படிப்பதை என் வழக்கமாகக் கொண்டவள் நான். என்ன செய்ய வேண்டுமோ அதை செய். முடிவைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். விதியைக் கட்டுப்படுத்த முடியாது.

கர்ம வினைகளில் கவனம் செலுத்து. அதன் பலனைப் பற்றி கவலைகொள்ளாதே என்று கீதையில் அர்ஜூனனிடம் கிருஷ்ணர் கூறுவார். இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது'' எனக் கூறினார்.

மேலும், ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அந்த வருத்தத்திலிருந்து விடுபட நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டது. கடந்த காலம் கடந்து சென்றதாகவே இருக்கட்டும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். பதக்கம் எப்போதுமே குழுவின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்தான். அதனை பெற்றுக்கொண்டவளாக நான் இருந்ததில் பெருமை அடைகிறேன்'' என மனு பாக்கர் பேசினார்.

நன்றி : ஜியோ சினிமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com