
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை பதக்கம் வென்றது.
நடப்பு ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சரப்ஜோத் சிங்குடன் களமிறங்கி இரண்டாவது பதக்கம் வென்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் (10 மீட்டர்) சரப்ஜோத் சிங், போராடி தோல்வி அடைந்திருந்தார். எனினும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சரப்ஜோத் சிங் யார்?
ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் தீன் பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங் விவசாயி. தாயார் ஹர்தீப் கெளர். சண்டிகரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பயிசியாளர் அபிஷேக் ராணாவிடம் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றார்.
இவர் தன்னுடைய சிறு வயதில், கோடை கால விடுமுறையில் இருந்தபோது சக நண்பர்கள் துப்பாக்கி வைத்து விளையாடியதைக் கண்டு துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டார்.
13வது வயதில் கால்பாந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என்ற கனவு கண்ட சரப்ஜோத் சிங், காலப்போக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெருகேறினார். 2014-ல் தனது தந்தையிடம் சென்று துப்பாக்கி வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த விளையாட்டு விலைமதிப்புமிக்கது என்று, அவரின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்தார் சரப்ஜோத் சிங். அதன் விளைவாக துப்பாக்கி சுடுதலில் தனது குடும்பத்தை உயர்த்தியுள்ளார் அவர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதே அவரின் முதல் சர்வதேச வெற்றி.
இதுவரை இவர் வென்ற பதக்கங்கள்: உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கம் வென்றுள்ளார். 3 உலகக் கோப்பை பதக்கம், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 2 வெள்ளி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளார்.
தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.