'நான் இறப்பதற்குள் நிறைய சாதிக்க விரும்புகிறேன்'- ஆதர்ஸ நாயகிக்கு அதிர்ச்சியளித்த கோரி காஃப் உருக்கம்

விம்பிள்டன் தொடரில் தனது ஆதர்ஸ நாயகியாக திகழும் வீனஸ் வில்லியம்ஸை 15 வயது வீராங்கனை முதல் போட்டியிலேயே வெற்றி கண்டார்.
'நான் இறப்பதற்குள் நிறைய சாதிக்க விரும்புகிறேன்'- ஆதர்ஸ நாயகிக்கு அதிர்ச்சியளித்த கோரி காஃப் உருக்கம்

விம்பிள்டன் தொடரில் தனது ஆதர்ஸ நாயகியாக திகழும் வீனஸ் வில்லியம்ஸை 15 வயது வீராங்கனை முதல் போட்டியிலேயே வெற்றி கண்டார்.

டென்னிஸ் விளையாட்டின் புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் பாரம்பரியமான இந்தத் தொடரில் கோப்பையை வெல்வது டென்னிஸ் நட்சத்திரங்களின் கவனாகும். இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (39), சகநாட்டவரான கோரி காஃபை திங்கள்கிழமை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோரி காஃப், விம்பிள்டன் முதல் போட்டியிலேயே தைரியமாக ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார்.

வீனஸ் வில்லிம்ஸை தனது ஆதர்ஸ நாயகியாகக் கொண்ட 15 வயதான கோரி காஃப், விம்பிள்டன் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் 24 வயதும், 269 தரவரிசைப் பட்டியலும் வித்தியாசம் உள்ளது கவனிக்கத்தக்கது.

விம்பிள்டனில் கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் வீனஸ் வில்லியம்ஸ், 5 முறை மகளிர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். அதிலும் கோரி காஃப் பிறப்பதற்கு முன்பே வீனஸ், 2 விம்பிள்டன் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டி முடந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோரி காஃப், 

வில்லியம்ஸ் சகோதரிகளின் ஆட்டம் தான் என்னை டென்னிஸ் விளையாட்டை நோக்கி ஈர்த்தது. என்னைப் போன்ற பலருக்கு அவர்கள் தான் முன்மாதிரியாக, சிறந்த ஆதர்ஸ நாயகர்களாகத் திகழ்கின்றனர். இந்த வெற்றிக்கு வீனஸ் வில்லியம்ஸ் எனக்கு மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்தார். வானம் தான் எல்லை, வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க பழக வேண்டும். நம்மால் அவ்வளவு தான் செய்ய முடியும் என்று ஊக்கமளித்தார். அவர் எனக்கு செய்துள்ள அனைத்து உதவிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவர் இன்றி நான் இந்த இடத்துக்கு முன்னேறியிருக்க முடியாது. இதை நான் இப்போது பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன்.

விம்பிள்டன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். நான் முன்பே கூறியது போன்று மிகச்சிறந்த சாதனையாளராக விரும்புகிறேன். நான் 8 வயது இருக்கும்போதே டென்னிஸ் விளையாட்டில் ஒருநாள் ஜோலிப்பேன் என்று எனது தந்தை கூறினார். இன்றுவரை நான் அதை 100 சதவீதம் நம்பவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. சிறகடித்து உயரப் பறக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். 

ஒருநாள் நாம் அனைவரும் மரணிப்பது நிச்சயம். அதுதான் எனக்கும் ஏற்படும். எனவே நான் இறப்பதற்குள்ளாக எனது வாழ்க்கையில் முடிந்த வரை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வில்லியம்ஸ் சகோதரிகள் மட்டுமல்லாது ஹாலிவுட் பாப் பாடகிகள் ரியன்னா மற்றும் பியான்ஸ் ஆகியோரும் எனக்கு முன்மாதிரி தான். களத்தைப் பொறுத்தவரையில் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்ட போது அதன் தாக்கம் எனக்குள் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். 

கடந்த முறை ஜூனியர் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்று எனது டென்னிஸ் வாழ்க்கை புத்துயிர் பெற்றதற்கு முக்கிய காரணம் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் தான். நான் சற்றே உண்ர்ச்சிவசப்பட்கூடியவள். இப்போது மட்டுமல்ல அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் அயர்மேன் கதாப்பாத்திரம் உயிரிழந்தபோது கூட திரையரங்கில் அழுதுவிட்டேன். அதை நினைக்கும்போதெல்லாம் எனது கண்கள் கலங்கும். ஏனென்றால் எனக்கு அயர்மேனை ரொம்பப் பிடிக்கும். 

இதேபோன்று களத்திலும் உணர்ச்சிவசப்படுகிறேன். கொஞ்சம் கோமாளித்தனமாகவும் நடந்துகொள்வேன். நிறைய நகைச்சுவைகள் கூறப் பிடிக்கும். ரசிகர்கள் என்னுடன் புகைப்படம் எடுப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சூழல்களுக்கு இப்போதுதான் பழகி வருகிறேன். அதிலும் சிரித்த மாதிரி போஸ் கொடுப்பதெல்லாம் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ரசிகர்கள் படமெடுக்கும்போது என்னால் எவ்வாறு உம்மென்று இருக்க முடியும் என்று நகைச்சுவையுடன் பேட்டியை முடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com