உத்தமர் கோலிக்கு..!

நடுவர் அவுட் கூறும் முன்பே வெளியேறிய உத்தமர் விராட் கோலி, இனிவரும் போட்டிகளிலாவது இதை பின்பற்ற முயற்சிப்பார் என நம்புவோம், வேறென்ன செய்ய!
உத்தமர் கோலிக்கு..!

நடுவர் அவுட் கூறும் முன்பே வெளியேறிய உத்தமர் விராட் கோலி, இனிவரும் போட்டிகளிலாவது இதை பின்பற்ற முயற்சிப்பார் என நம்புவோம், வேறென்ன செய்ய!

கிரிக்கெட்டின் அரசன் என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி, களத்தில் ஆக்ரோஷ செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர். ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக தனது ஆக்ரோஷத்தை எதாவது ஒரு வடிவில் வெளிப்படுத்துவது அவரது வாடிக்கை. உதாரணத்துக்கு, 2011-12 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது ரசிகர்களிடம் நடந்துகொண்ட விதமும், அதற்காக 50 சதவீத ஊதியத்தை அபராதமாகச் செலுத்தியதெல்லாம் உலகறிந்தது.

கவாஸ்கரையும், சச்சின் டெண்டுல்கரையும், டிராவிட்டையும் பெற்றிருந்த இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலிகளின் வரவு சற்றே சறுக்கலை (தன்னிலையில்) ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. கவாஸ்கரும், சச்சினும் தங்கள் காலங்களில் பல சாதனைகளை தன்வசப்படுத்தினர். எதிரணி வீரர்கள் எத்தனை முறை வசைபாடினாலும் அதனை தங்களின் ஆட்டத்தின் மூலம் மட்டுமே எதிர்கொண்டு பதிலடி தந்தார்கள். அடுத்த தலைமுறைக்கு சிறந்த ஆதர்ஸ நாயகர்களாகத் திகழ்ந்தவர்கள். கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுளாகவே உயர்ந்து நின்றவர்கள். இவர்கள் சாதனைகளை எல்லாம் சாதாரணமாகக் கடந்துவரும் விராட் கோலிக்கு, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்று யாராவது உரக்கக் கூறினாலும் காதில் விழுந்துவிடப் போவதில்லை. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக் கோப்பை ஆட்டத்தில், ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அவமதிக்கும் விதமாக இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டனர். அதனை அப்போதே மைதானத்தில் கண்டித்த கோலி, இந்திய ரசிகர்கள் தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், ஸ்டீவ் ஸ்மித் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுவிட்டார். எனவே இதுபோன்ற செயல்கள் தேவையற்றது என்று தனது கருத்தையும் ஆழமாகப் பதிவு செய்தார். விராட் கோலியின் இந்த நடவடிக்கை அன்புக்குரியதாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் பின்னர் தெரிவித்தார். கோலியின் இந்தச் செயல் உலக கிரிக்கெட் ரசிகர்களிடமும் ஆதரவைப் பெற்றது. 

பாகிஸ்தானுடனான போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், பந்துவீசிய பின்னர் சறுக்கி விழுந்தார். அப்போது அவரை கைதூக்கிவிட்ட கோலி, நலமும் விசாரித்தார். இதுவும் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆமிர் பந்துவீச்சில் அடிக்க முயன்ற பந்து, விக்கெட் கீப்பர் சர்பராஸிடம் சென்றது. அவர் அவுட் என நடுவர் தீர்மானித்து அறிவிக்கும் முன்பே, பேட்டில் பந்து பட்டதாக நினைத்து வெளியேறினார் (ஜென்டில்மேன்) விராட் கோலி. பின்பு மைதானத்தில் இருந்த பெரிய திரையில் அந்தக் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில், ஸ்னிக்கோமீட்டர் மூலம் பார்த்தபோது, பந்து சிறிதளவுகூட கோலியின் பேட்டில் படவில்லை எனத் தெரிந்தது. பின்னர் பெவிலியனில் தனது பேட்டை முழுமையாக ஆய்வு செய்த கோலி, அக்காட்சிகளைக் கண்டு ஆத்திரமும் அடைந்தார்.

*

இந்நிலையில், 'முதல் நூறாயிரம் முறை இது நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் ''பென் ஸ்டோக்ஸ்'' என எனது பெயரை நீங்கள் கூறும் ட்வீட்டை நான் தொடர்ந்து பார்க்கையில் எனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிடலாம் என்று என்ன தோன்றுகிறது' என இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணி ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தும்போதும் விராட் கோலி எனது பெயரை உச்சரிக்கிறார். இதை அவரது உதடுகளை நன்கு கவனித்தால் நீங்கள் அறியலாம் என்று கிண்டலாகப் பேசியுள்ளார். இந்த ட்வீட்டில் அப்படி என்ன உள்ளது என பலரும் நினைக்கலாம். பென் ஸ்டோக்ஸ் பெயரை எதற்காக விராட் கோலி தொடர்ந்து உச்சரிக்க வேண்டும் என்றும் கருதலாம். ஆனால், விராட் கோலியின் கிரிக்கெட்டை நன்கு அறிந்தவர்களுக்கு இது பளிச்செனப் புரியும் என்பதில் ஐயமில்லை. 

அவர் ட்வீட் செய்ததுதான் தாமதம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அவர்களது ஏகோபித்த ஆதரவை ஸ்டோக்ஸுக்கு அளித்து வருகின்றனர். மேலும் விராட் கோலி அதை உச்சரிக்கும் தருணங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 'பென் ஸ்டோக்ஸ்'! - யு19 நாட்களில் இருந்து இப்போது வரை விராட் கோலி தொடர்ந்து ஜெபம் செய்யும் மந்திரச் சொல்லாக இருந்து வருவதற்கு என்ன காரணம்? இந்தச் சொல்லை (''பெஹன் **'' - அபத்தமான ஆபாச வார்த்தை என்பதால் இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது) இனியும் தொடரமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

விராட் கோலி சாதனையாளன் என்பதில் யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை. எதிரணியினரைத் தவிர இந்திய ரசிகர்களுக்கு அதில் பொறாமையும் இருந்துவிடப் போவதில்லை. ஆனால், இதுவரையிலான வீரர்கள் யாரும் செய்திராத அந்த காரியத்தை விராட் கோலி விடாமல் செய்து வருவதை எதைக் காரணம் காட்டி ஏற்றுக்கொள்ள முடியும். கிரிக்கெட் என்ற விளையாட்டு குழந்தை முதல் பெரியவர்கள் வரையில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பலருக்கு ஹாக்கிதான் நமது தேசிய விளையாட்டு என்பது படித்திருந்தாலும் இந்நேரம் மறந்திருப்பார்கள்.

கிரிக்கெட்டில் தொழில்நுட்ப ரீதியில் தன் மீது இருக்கும் தவறுகளை அவ்வப்போது திருத்திக்கொள்ளும் கோலிக்கு இது மட்டும் முடியாமல் போனது ஏனென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விளையாட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு இது அழகல்ல. நாடே தங்களை தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடும்போது, குழந்தைகள் பார்க்கும் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னாக விளங்கும் வேளையில், அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் உள்ளதென்பது விராட் கோலிக்கு நினைவிருக்கட்டும். 

தனிநபர் வாழ்க்கையை யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், பொதுவெளியில் ஒவ்வொருவர் செய்யும் காரியமும் இந்த சமூகத்தின் மீதான தாக்கமாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதிலும் பல கோடி பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘பென் ஸ்டோக்ஸ்’ (பெஹன் **) எனும் ஆபாச ஜெபமெல்லாம் தேவைதானா? விளையாட்டில் வீரம் கூட இருக்கலாம். ஆனால், வெறி எதற்கு? ஆக்ரோஷம் இருக்கலாம், ஆபாசங்கள் எதற்கு? இந்திய கிரிக்கெட் டிஎன்ஏ-விலேயே இல்லாத இந்த மாற்றங்கள் விராட் கோலிக்கு எதற்கு? இல்லாத அவுட்டில் வெளியேறியது, எதிரணி வீரர்களுக்காக கரிசனம் காட்டுவது, இந்திய ரசிகர்கள் தவறான முன்மாதிரியாகவிடக் கூடாது என்று வருந்துவதெல்லாம் இருக்கட்டும். உங்கள் விளையாட்டை மட்டுமல்லாமல், ஆடுகளத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையும் அடுத்த தலைமுறை உற்று நோக்குகிறது என்பதையும் உத்தமர் விராட் கோலி மறந்துவிட வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com